யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்காக போராடத் தயார்
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=178163587128765033#sthash.7NoEEHfy.dpuf

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்காக போராட தயாராக இருப்பதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நஜீத் இந்திக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் வார இதழ் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மாணவர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்வதாக அரசாங்கம் குற்றம் சுமத்துகிறமை தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்.
இந்தக் குற்றச்சாட்டு புனையப்பட்ட ஒன்று. நாங்கள் மாணவர்களைத் தவறான பாதைக்கு ஒருபோதும் இட்டுச் செல்லவில்லை ஆட்சியிலுள்ள அரசாங்கம் தான் மக்களையும் மாணவர்களையும் குழப்புகிறது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல போன்ற கொடுப்பனவுகள் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை.இதனால் 67 வீதமான மாணவர்கள் பகுதி நேர வேலைகள் செய்தே பல் கலைக்கழகக் கல்வியினை மேற்கொள்ள வேண்டி உள்ளது.
அது மட்டுமின்றி இலவசக் கல்வியை அரசாங்கம் இல்லாதொழித்து தனியாருக்கு கல்வியை விற்பனை செய்ய முயற்சிக்கிறது . இதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் போராடினால் போதாது. நாட்டிலுள்ள அனைத்து மக்களும் அரசின் அராஜகத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும்.
கேள்வி- நாட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் கடந்த காலங்களிலும் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. போர் நடந்த காலத்தை விடவும் இப்போது இந்த வன்முறைகளின் வீரியம் அதிகரித்து இருப்பதாக உணர்கிறீர்களா?
பதில் - ஆம்! நிச்சயமாக கடந்த காலங்களையும் விட தற்போது மாணவர் மீதான வன்முறைகள் அதிகரித்துச் செல்வதை ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் வெளிக்காட்டுகின்றன. முன்னைய காலங்களில் பெரும்பாலும் மறைமுக ரீதியான அழுத்தங்கள், மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் என்பனதான் இடம்பெற்றன. அல்லாது விடின் ஆர்ப்பாட்டங்கள் நிகழும் போது மாணவர்களை பொலிஸாரோ, அரசின் கைக்கூலிகளோ தாக்கியிருப்பார்கள்.
ஆனால் இப்போது நேரடியாகவே மாணவர்கள் மீது அரசு கைவைக்கத் தொடங்கிவிட்டது. மாணவர் ஒருவரை எந்தவிதக் குற்றச்சாட்டுகளுமின்றி பகிரங்கமாகப் பல்கலைக்கழகத்துக்கு வந்து கைது செய்து இழுத்துப்போகுமளவுக்கு இந்த வன்முறைப் பிசாசு மாணவர்களை நோக்கி ஏவிவிடப்பட்டுள்ளது.
கேள்வி- ஆனால் நீங்கள் சொல்வது போன்ற நேரடி வன்முறைகளை யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் சில தசாப்தங்களுக்கு முன்பிருந்தே அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்கள். பல பல்கலைக்கழக மாணவர்கள் கொலையுண்டுமிருக்கிறார்கள். இப்படி இலங்கையிலேயே அதிகளவான வன்முறைகளை எதிர்கொண்டவர்களாக யாழ். பல்கலை மாணவர்கள் இருந்த போதும், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும் இடையிலான தொடர்புகள் குறைவடைந்தே உள்ளனவே.அது ஏன்?
பதில்- உண்மைதான். எமக்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையே அதிகளவு தொடர்புகள் இல்லைத்தான். கலந்துரையாடல் மட்டுமே சில சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளது. நாட்டில் இடம்பெற்ற முப்பது ஆண்டு காலப்போரும் யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்துடனான தொடர்புகளை மேற்கொள்ள தடையாக இருந்தது.
தற்போது அவ்வாறான நிலைமை இல்லை. யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகளவான பிரச்சினைகள் இருக்கின்றன. எங்களுக்கும் நன்றாகத் தெரியும். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இனம்,பால், மொழிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மாணவர் அமைப்பாகும்.நாங்கள் மாணவர்கள் என்ற ரீதியில்தான் பிரச்சினைகளை அணுகுகின்றோமே தவிர இன,மத பேதங்களைக் கவனத்தில் எடுப்பதில்லை.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் யாழ். பல்கலைகழக மாணவர்களும் இணைந்து செயற்பட வேண்டுமென்பதே எங்களின் விருப்பமும். அவ்வாறு யாழ்.பல்கலை மாணவர்களும் எம்முடன் இணைந்து கொண்டால் எமக்குப் பலம்.அத்துடன் யாழ்.பல்கலை மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாம் உடனடி நடவடிக்கையில் இறங்கும் இந்தப் பிணைப்பு அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.