ஆளுங்கட்சியினால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் எதிர்க்கட்சி நடுநிலைமை வகித்ததுடன் வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானத்தால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரண்டாம் இணைப்பு
வடமாகாண சபையில் காணி பிரச்சினை தொடர்பான விசேட செயலமர்வு இன்று அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, இந்த வருட இறுதிக்குள் தனியாருடைய காணிகள் மற்றும் கட்டடங்கள் என்பவற்றிலிருந்து முப்படையினரும் வெளியேற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை ஆதரவும் தெரிவிக்கவில்லை.
வடமாகாணத்தில் தனியார் காணிகள், கட்டடங்களில் நிலை கொண்டுள்ள படையினர் இந்த வருட இறுதிக்குள் வெளியேற வேண்டும் என ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாகாண சபையின் காணி அதிகாரத்தை வடமாகாண சபைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
வடமாகாணத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் முழுமையான ஆவணம் ஒன்றை தயாரிக்கப் போவதாகவும் அதனை ஜனாதிபதிக்கும், சர்வதேசத்திற்கும் வழங்கும் வகையிலான ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் சுட்டிக்காட்டினார்.
இன்றைய விசேட அமர்வில் வட மாகாணத்தில் இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸார், விமானப் படையினர் மற்றும் அரசியல்வாதிகள் பொது மக்களுடைய காணிகளை குறிப்பாக தமிழர்களுடைய காணிகளை சட்டவிரோதமாக சுவீகரித்துள்ளனர் என்ற பலமான குற்றச்சாட்டுக்களை கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் புள்ளி விவர ரீதியாக எடுத்துரைத்ததுடன், ஆதாரங்களையும் சபையில் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் மௌனமாக இருந்ததுடன், கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட தகவல்களை தானும் திரட்டுவதில் அக்கறையாக செயல்பட்டார்.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் மாற்றுக் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வடமாகாணத்தின் 5 மாவட்டங்களில் படையினரின் தேவைகளுக்காகவும், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்காகவும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 67ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமானளவு நிலம் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையில் இன்றைய தினம் தரவுகளுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் தரவுகளை ஆவணப்படுத்தி சர்வதேசத்திற்கு அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வடக்கின் 5 மாவட்டங்களிலும் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பெருமளவு தமிழ் மக்களின் நிலம் சிங்கள குடியேற்றங்களுக்காகவும் பாரிய படைமுகாம்கள், படையினருக்கான பயிற்சி முகாம்களுக்காகவும் தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக இன்றைய தினம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் இடம்பெயர்ந்தோர் முகாம் அமைந்திருந்த 6400ஏக்கர் மற்றும் பாவற்குளம், கென்பாம், டொலர்பாம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் பெருமளவு நிலம் சிங்கள மக்களுடைய குடியேற்றத்திற்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 35ஆயிரம் ஏக்கர் தமிழ் மக்களின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மன்னார் மாவட்டத்தில் சுமார் 23ஆயிரம் ஏக்கர் நிலம் முப்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 13588ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 120 இடங்களில் படையினரின் தேவைகளுக்காக மக்களுடைய உறுதிக் காணிகளிலிருந்து மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் மாகாணசபை உறுப்பினர்கள், முழுமையான ஆதாரங்களுடன் தரவுகளை மாகாணசபைக்கு சமர்ப்பித்திருக்கின்றனர்.
சேகரிக்கப்பட்டுள்ள இந்தத் தகவல்களினடிப்படையில் வடமாகாணத்தின் காணி தொடர்பில் ஆவணம் ஒன்றைச் உருவாக்கவுள்ளதுடன், அந்த ஆவணத்தை இலங்கை ஜனாதிபதிக்கும், சர்வதேச நாடுகளுக்கும் சமர்ப்பிப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இன்றைய அவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
