வடக்கின் தமிழ் ஊடகவியலாளர்களின் பின்னணியில் புலம்பெயர் புலிகள் என அரச சார்பு ஊடகங்கள் சேறடிப்பு-
குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:-

உலக தமிழ்ச் செய்திகள்01 ஆகஸ்ட் 2014ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் வழமை போலவே புலம்பெயர்புலிகளே இருப்பதாக அரசு ஆதரவு ஊடகங்கள் கண்டுபிடித்துள்ளன.
நேற்றிரவு அரச தொலைக்காட்சியும் இன்று அரச பெரும்பான்மை மொழி நாளிதழான றிவிரவும் நேற்றைய ஆர்ப்பாட்டத்திற்கு புலம் பெயர் புலிகளது பின்னணியே காரணமெனவும் அத்துடன் யாழ்.ஊடக மையத்தின் செயற்பாட்டாளர்களது பெயர்விபரங்களையும் குறிப்பிட்டு செய்திகளை வெளியிட்டுள்ளது.
அத்துடன் அத்தகையவர்களது பெயர்கள் திரட்டப்பட்டு பாதுகாப்பு அமைச்சிடம் விரைவில் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே “தமிழ் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அரசாங்கம் தொடர்ந்து அவதானித்துக் கொண்டு வருகிறது. அவர்களினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாங்கள் உணர்கிறோம். இந்த விடயத்தில் அவர்களை நாங்கள் எச்சரிக்கிறோம்” என தகவல், ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல. நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது எச்சரித்துள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு ஊடக செயலமர்விற்கு சென்ற 16 ஊடகவியலாளர்களின் வாகனத்திற்குள் இராணுவம் கஞ்சாப்பொதியை போட்ட விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே இதனை தெரிவித்தார். தமிழ் ஊடகவியலாளர்கள் குறித்து பேசும்போது, அமைச்சர் கடும் கோபமடைந்து ஆவேசப்பட்டு பேசினார். அவர்கள் நாட்டிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்றும் பரபரப்பு குற்றம் சுமத்தினார்.
சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் தேசத்துரோக போக்கில் செயற்படுகின்றன. அதற்கு இந்த ஊடகவியலாளர்களும் துணைபோகின்றார்கள். இவர்களினால் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றார். தேசிய பாதுகாப்பிற்கு எதிராக தமிழ் உடகவியலாளர்கள் செயற்படுகின்றார்கள் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.