இராணுவ பிடியில் இருக்கும் காணியில் சிங்கள குடியேற்றம்?
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=729343272430582877#sthash.pQoBNtdM.dpuf
வடபகுதியில் இராணுவ முகாம்களுக்கு என்று சுவீகரிக்கப்படும் காணிகளில் சிங்களக்குடி யேற்றங்களை நிறுவுவதற்கே அரசு முயற்சித்து வருகிறது. இதனால் பரம்பரையாக தமது சொந்த இடங்களில் வாழ்ந்த மக்கள் அகதி முகாம்களில் அவல வாழ்வை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா. தமிழரசுக் கட்சியின் காங்கேசன் துறைக்கிளை தெல்லிப் பழையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற் றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
பரம்பரை பரம்பரையாக விவசாயம், மீன்பிடி போன்ற தொழில்களைச் செய்து வந்த மக்கள் இன்று வீடற்றவர்களாக அகதிகளாக அவல வாழ்வை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களது பூர்வீக நிலங்களை இராணுவத்தினர் தம்வசம் வைத்துள்ளனர்.
இவ்வாறு வைத்திருக்கும் காணிகளை கையகப்படுத்தும் அவர்கள் சிங்களக் குடியேற்றங்களையே தமிழர் பகுதியில் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இன்று தமிழ் இன விகிதாசாரத்தைக் குறைக்கும் வகையில் அரசு செயற்பட்டு வருகிறது. வடக்குக் கிழக்கில் அமைதியின்மையைப் பேணி மக்களை வெளியேற்றுவதில் அரசு குறியாக உள்ளது.
இன்று சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில் அகதி முகாம்களில் வசிக்கின்றனர். இவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தி வருகிறார். கடந்த 60 ஆண்டு காலமாக தொடரும் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள் தற்போது மேலும் வலுப்பெற்றிருக்கின்றன.
அதாவது பண்பாட்டு விழுமியங்களை சிதைப்பது ஊடாக ஒரு இனத்தை அழித்து விடலாம் என்பதே அவர்களின் நீண்ட கால திட்டமாக உள்ளது.
மயிலிட்டியில் தந்தை செல்வா காலத்தில் துறைமுகம் அமைக்கப்பட்டு இங்குள்ள உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் எமது பகுதிகளில் இருந்து 300 க்கு மேற்பட்ட லொறிகளில் கடலுணவு கொண்டு செல்லப்பட்டது.
தென்னிலங்கையில் இருந்து வரும் வியாபாரிகள் பெருமளவான பொருள்களை கொள்வனவு செய்து சென்றனர். இந்தக் காலத்தில் செல்வச் செழிப்புடன் எமது கிராமங்கள் விளங்கின. ஆனால் இன்று நாம் தென்னிலங்கையை நம்பி வாழ வேண்டிய சூழல் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.
மத்திய அரசு மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை தம்வசப்படுத்தி வைத்திருக்கிறது. இதனால் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக துன்பங்களையே எதிர்நோக்க வேண்டியுள்ளது என்றார்.