Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Tuesday, April 1, 2014

அணுகுமுறையே தவறு!

Dinamani
First Published : 01 April 2014 01:11 AM IST
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. 12 நாடுகள் ஆதரிக்கவில்லை. 12 நாடுகள் புறக்
கணித்தன. அவற்றில் இந்தியாவும் ஒன்று. இலங்கைக்கு எதிராக இதற்கு முன் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை பல நெருக்கடியான நிலைகளில் ஆதரித்த இந்தியா, எது எப்படியும் போகட்டும் என்ற மனோபாவத்தில் மேற்கொண்ட அலட்சியமான முடிவு இது.
இந்தப் புறக்கணிப்புக்காக இலங்கை அதிபர் ராஜபட்ச உளம் மகிழ்ந்து, பாராட்டி இருப்பதும், இதற்குப் பரிசாக 93 இந்திய மீனவர்களை விடுதலை செய்திருப்பதும், இந்தியாவை மேலும் கேலி செய்வதுதானே தவிர வேறு ஏதும் இல்லை.
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானமே நீர்த்துப்போய் உள்ளது என்பதுதான் குற்றச்சாட்டு. அமெரிக்கா முதலில் தாக்கல் செய்த நகல் தீர்மானத்தில், தமிழர் வாழும் பகுதியிலிருந்து சிங்கள ராணுவம் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும் என்ற வாசகம் இருந்தது. ஆனால் ஐ.நா.வில் முன்வைக்கப்பட்ட வரைவு தீர்மானத்தில் இந்த வரிகள் நீக்கப்பட்டு விட்டன.
நீக்கப்பட்ட இந்த வரிகளை தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி புறக்கணிப்பு செய்திருந்தால்கூட, இந்திய அரசைப் பாராட்டலாம். ஆனால், இந்தியா முற்றிலுமாக ஒதுங்கிக் கொண்டுவிட்டது. இதற்கு சொல்லப்பட்ட காரணம், "ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை, இன்னொரு நாட்டின் இறையாண்மையைக் குலைப்பதாக அது அமைந்துவிடும்' என்பதுதான். காஷ்மீரிலும் இதே போன்று மனித உரிமை மீறல்களுக்காக ஐ.நா.வில் ஒரு தீர்மானம் முன் வைக்கப்படும்போது, அதை எதிர்க்க முடியாமல் போய்விடும் என்ற அச்சத்தை இந்திய அரசின் காரணம் சொல்லாமல் சொல்கிறது.
காஷ்மீரில் நடைபெற்று வரும் போராட்டத்தையும் இலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பு போராட்டத்தையும் ஒன்றாகப் பார்க்கத் தேவையில்லை என்பதை, இந்திய அரசு இன்னமும் புரிந்துகொள்ள மறுக்கிறது. இந்தியா ஆதரவு தெரிவிக்காமல் புறக்கணிக்கக் காரணம், சிங்கள ராணுவ வெளியேற்றம் தொடர்பான வரிகள் வரைவு தீர்மானத்தில் நீக்கப்பட்டதுதான் என்று ராஜதந்திரமாக நழுவக்கூட இந்திய அரசுக்குத் தெரியவில்லை. பொதுத்தேர்தல் நடைபெறும் நேரத்தில், தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொள்ள விரும்பாமல், அரை மனதுடன் தீர்மானத்தை ஆதரித்திருந்து அரசியல் ஆதாயம் தேடவாவது தெரிந்ததா என்றால் அதுவும் இல்லை.
பிரிட்டன் பிரதமர் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டுக்கு வந்தபோது, அவரிடம் புகார் தெரிவித்த பெண்மணியை காணவில்லை என்று கூறப்படுகிறது. இலங்கை அரசு எத்தகைய அராஜக நடவடிக்கையை மேற்கொள்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இத்தகைய சூழ்நிலையில், தமிழர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சிங்கள ராணுவத்தை வெளியேற்றாமல், சர்வதேச விசாரணை நடத்தப்படுமேயானால், அதனால் ஒரு பலனும் இருக்கப்
போவதில்லை. பிரிட்டன் பிரதமரிடம் புகார் சொன்ன பெண்மணி காணாமல் போனதுபோல் தாமும் காணாமல் போய்விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக யாரும் விசாரணை அமைப்பிடம் பேச மாட்டார்கள். இதனால், மனித உரிமை மீறல்களின் முழுத்தோற்றம் விசாரணையில் வெளிப்படாமலேயே போகும்.
இத்தகைய தீர்மானத்தால் இலங்கையில் நடைபெற்றுவரும் புனரமைப்பு மற்றும் மறுகுடியேற்றப் பணிகளில் தொய்வு ஏற்படும் என்று இலங்கை அதிபர் ராஜபட்ச சொல்வது, ஒருவகையான மறைமுக எச்சரிக்கை.
புனரமைப்பு மற்றும் மறுகுடியேற்றப் பணிகளுக்காக இந்தியா பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், இத்தகைய பணியில் தொய்வு ஏற்படும் என்று சொல்வதை இந்தியா எவ்வாறு கேட்டுக்கொண்டு சும்மா இருக்கிறது?
இலங்கையில் நிலவும் சூழலையும், அதனால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தில்லியில் இருப்பவர்கள் பிரச்னையை அணுகுவதுதான் வேதனை. இந்தியாவுடன் தொப்புள்கொடி உறவுள்ள இலங்கைவாழ் தமிழர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்வது அவர்களுக்காக மட்டுமல்ல, இந்துமகா சமுத்திரத்தில் அன்னிய ஏகாதிபத்தியர்கள் மேலாதிக்கம் செலுத்திவிடாமல் பாதுகாக்கவும்தான். இந்திரா காந்திக்குத் தெரிந்திருந்த அந்த ராஜதந்திரம் அவருக்குப் பின்னால் ஆட்சியிலமர்ந்தவர்களுக்கு இல்லாமல் போய்விட்டதால்தான், இலங்கைப் பூனையைப் பார்த்து இந்தியப் புலி பயந்து நடுங்குகிறது. ஆண்மைத்தனமுள்ள ஆட்சி இந்தியாவில் அரியணை ஏறினால் மட்டுமே இதற்கு விடைகாண முடியும்; இந்துமகா சமுத்திரத்தில் இந்தியாவின் மேலாண்மையை உறுதிப்படுத்திக் கொள்ளவும் முடியும்!