வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள் 'கன்சைட்' முகாமில் வதைக்கப்பட்டனரா.?

by RasmilaD on 2017-12-26
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்கள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க மற்றும் தற்போது மரண தண்டனை கைதியாக உள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன ஆகியோர் ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளமையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளில் வெளிப்படுத்தி கொண்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர், கேகாலையைச் சேர்ந்த சாந்த சமரவிக்ரம, இப்பாகமுவையைச் சேர்ந்த பிரதீப் ஆகியோரின் கடத்தல்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாகவே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இம்மூவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன் இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் கன்சைட் எனும் நிலத்தடி சிறைக் கூடங்களிலேயே தடுத்து வைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சந்தேகிக்கின்றது.
குறிப்பாக 5 மாணவர் கடத்தல் விவகாரத்தில் கடற்படை முன்னாள் ஊடகப் பேச்சாளர் தஸநாயக்க, முன்னாள் தளபதி கரன்னாகொட ஆகியோர் பொறுப்புக் கூறவேண்டும் என்பதற்கான சான்றுகளை குற்றப் புலனய்வுப் பிரிவினர் ஏற்கனவே கண்டறிந்திருந்தனர். இந் நிலையில் கேகாலை மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கொன்றின் பிரதிவாதியான சாந்த சமரவிக்ரம, இப்பாகமுவ பகுதியை சேர்ந்த பிரதீப் ஆகியோர் கன்சைட் முகாமில் இருந்தமைக்கான ஆதாரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்து கோட்டை நீதிவானுக்கு அறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.
இதில் கேகாலை சாந்த சமரவிக்ரம, அலவ்வ பொலிஸார் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெறும்போது தப்பியோடியதாக பொலிஸ் தரப்பில் அப்போது கூறப்பட்டது. எனினும் தற்போது காணாமல் போயுள்ள சாந்த எவ்வாறு வைத்தியசாலையில் இருந்து தப்பி, அதி பாதுகப்பு வலயமான கன்சைட் நிலத்தடி முகாமுக்குள் வந்தார் என கேள்வி எழுப்பும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அது தொடர்பில் விசாரணை செய்கின்றது.
அத்துடன் கன்சைட் முகாமில் இருந்ததாக கூறப்படும் தற்போதும் காணாமல் போயுள்ள பிரதீப் என்பவர் யார் என்பதை அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டறிந்துள்ளது.
இப்பாகமுவ பிரதீப் என அறியப்பட்ட குறித்த நபர், கொகரல்ல பொலிஸ் பிரிவில் தேவவரம, யக்கல இப்பாகமுவ எனும் முகவரியில் வசித்த விதாரன ஆரச்சிகே தொன் பிரதீப் நிஷாந்த என்பதை குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.
அவர் காணாமல் போனமை தொடர்பில் கொகரல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு உள்ள நிலையில், ஜீப் வண்டியில் வந்தோரால் அவர் கடத்திச் செல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளனர்.
அளவ்வை, கொகரல்ல பொலிஸ் நிலையங்கள் குருணாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்துக்கு உட்பட்டு நிர்வாகம் செய்யப்பட்ட நிலையில் இக்கடத்தல்கள் இடம்பெற்ற போது, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவே குருணாகல் மாவட்டத்துக்கு பொறுப்பான பொலிஸ் பிரதானியாக செயற்பட்டுள்ளார்.
அத்துடன் 5 மாணவர் கடத்தல் விவகாரம் வெளிப்படுத்தப்பட காரணமாக இருந்த, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட தனது தனிப்பட்ட விவகாரம் தொடர்பில் லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்கவுக்கு எதிராக முதலில் முறையிட்டதும் வாஸ் குணவர்தனவிடமாகும். பின்னரேயே அது பொலிஸ் மா அதிபரால் சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டிருந்தது.
இந் நிலையிலேயே கரன்னாகொட, தஸநாயக்க மற்றும் வாஸ் குணவர்தன ஆகியோர் ஒன்றாக இந்த வெள்ளை வேன் கடத்தல்கள் தொடர்பில் செயற்பட்டனரா, அவ்வாறு வெள்ளை வேனில் கடத்தப்படுவோர் கன்சைட் நிலத்தடி முகாமிம் தடுத்து வைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு சந்தேகிக்கின்றது.
இந் நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை, குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவின் வழி நடத்தலின் கூட்டுக் கொள்ளை பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா தலைமையிலான குழுவினர் முன் னெடுத்துள்ளனர்.