விக்னேஸ்வரன் மீது அவதூறு; பகிரங்க மன்னிப்புக் கோரிய பத்தியாளர்
Friday, October 27, 2017வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தொடர்பில் நான் எழுதிய தகவல்கள் தவறானவை, அவதூறானவை எனப் பிரபல அரசியல் பத்தியாளரும், கனடாவில் வாழ்ந்து வரும் சுயாதீன ஊடகவியலாளருமான டேவிட் புயல் சபாபதி ஜெயராஜ் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சரிடம் பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளார்.
அத்துடன் குறித்த செய்திக் கட்டுரையைத் தான் மீளப் பெற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சரும், நீதியரசருமான விக்னேஸ்வரன் கடந்த ஜனவரி மாதம் கனடா விஜயம் செய்திருந்தார். இதன் போது 'முதலமைச்சருடன் ஒரு மாலை' எனும் விருந்து நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
கனடியத் தமிழர் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின் மூலம் திரட்டப்பட்ட நிதியானது வடமாகாண முதலமைச்சருடைய ஆலோசகர் நிர்மலன் கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டதாகவும், மக்களுக்கான உதவித் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதியினை நிர்மலன் கார்த்திகேயன் தவறாகக் கையாண்டாரெனவும், இலங்கையின் பணமோசடிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இது தொடர்பான புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் உண்மைக்குப் புறம்பான செய்திக் கட்டுரையொன்றை டேவிட் புயல் சபாபதி ஜெயராஜ் தனது இணைய வலைத் தளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண முதலமைச்சர் தொடர்பான குறித்த நிதி மோசடிக் குற்றச்சாட்டு இலங்கையிலும், உலகளாவிய ரீதியிலும் ஊடகங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த கனடிய தமிழர் சமூக அமையம் இந்தக் குற்றச்சாட்டை உடனடியாகவே மறுத்திருந்தது.
வடமாகாண முதலமைச்சர் தொடர்பில் அவதூறாக எழுதிய டேவிட் புயல் சபாபதி ஜெயராஜ்ஜிற்கு எதிராகச் சட்ட ரீதியான சில நடவடிக்கைகளும் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையிலேயே வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தொடர்பில் தான் எழுதிய தகவல்கள் தவறானவை, அவதூறானவை எனத் தெரிவித்து அவர் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.
மேற்படி நிகழ்வை ஏற்பாடு செய்த கனடியத் தமிழர் சமூக அமையம் இன்று (27) இது தொடர்பாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
TCCSF Press Release - Apology and Retraction by DBS Jeyaraj of false reporting on his article On June 18,... by Thavam Ratna on Scribd
(செல்வநாயகம் ரவிசாந்)
