“காணிகளை உரிமையாளர்களுக்கு வழங்கவேண்டியது அவசியம் முடியாவிடின் ஏற்றுக்கொள்ளத்தக்க நட்டஈடு வழங்கப்படவேண்டும்“
by Priyatharshan on 2017
பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளின் உரிமை தொடர்பான செயற்பாடுகள் அடையாளம் காணப்பட வேண்டும். அதன் பின்னர் அந்தக் காணிகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டியது அவசியம். அவ்வாறு காணிகளை மீள வழங்க முடியாவிடின் காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும். இதுவே ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உனாமெக்குலே தெரிவித்தார்.
நல்லிணக்க செயற்பாடுகளை அடையாளம் காணும் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபை செயற்பட்டு வருகிறது. அந்தவகையில் நல்லிணக்க செயற்பாடுகளில் காணிகளை விடுவிக்கும் காரணியானது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதாவது சமூகங்களுக்கு மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் இந்தக் காரணி முக்கிய பங்காற்றும் என்றும் ஐ.நா. வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உனாமெக்குலே சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாணத்தில் காணிகளை இழந்த மக்கள் அவற்றை மீள பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உனாமெக்குலேயிடம் பிரத்தியேகமாக கேசரி வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதி உனாமெக்குலே இந்த விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
எந்தவொரு சமூகத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும். இலங்கையைப் பொறுத்தவரையில் காணிப் பிரச்சினையானது ஒரு பாரிய விவகாரமாக காணப்படுகிறது. இது நீண்டகாலப் பிரச்சினையாக இருக்கின்றது. காணிகளின் உண்மையான உரிமையாளர்கள் அவை எப்போது தமக்கு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்கான உரிமையை கொண்டுள்ளனர்.
இந்த காணி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக நாங்கள் நினைக்கின்றோம். இந்த வாரம்கூட ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றதாக அறிந்தோம். அந்த கலந்துரையாடல்களின் முடிவுகள் அல்லது விளைவுகள் என்னவென்பதை அறிந்து கொள்ள நாங்கள் ஆவலாக இருக்கின்றோம்.
கேள்வி பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்குமா?
பதில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்துடன் பணியாற்றி வருகிறது. அதாவது நல்லிணக்க செயற்பாடுகளை அடையாளம் காணும் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபை செயற்பட்டு வருகிறது. நல்லிணக்க செயற்பாடுகளில் காணிகளை விடுவிக்கும் காரணியானது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதாவது சமூகங்களுக்கு மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் இது முக்கிய பங்காற்றும் காரணியாகும்.
காணிகள் விடுவிக்கப்பட்டதும் நாங்கள் உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்து செயற்பட்டு மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம். அந்த மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவோம். காணிகளின் உரிமை தொடர்பான செயற்பாடுகள் அடையாளம் காணப்பட வேண்டும். அதன் பின்னர் காணிகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டியது அவசியம். அல்லது காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.
கேள்வி ஆனால் போராட்டம் நடத்தும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நட்டஈடு வேண்டாம் என்றும் தமது காணிகளே வழங்கப்பட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இதனை ஐக்கிய நாடுகள் சபை எவ்வாறு பார்க்கிறது?
பதில் மக்களின் பக்கம் இருந்து பார்க்கும்போது அந்த தர்க்கத்தில் நியாயம் இருப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதில் ஒரு பொருள் உள்ளது. ஆனால் உலகில் எந்த அரசாங்கமாக இருந்தாலும் காணிகள் அரச தேவைக்காக பெறப்பட்டால் அவற்றுக்கு நட்டஈடு வழங்கலாம் என்பதும் பெறுமதியானதொரு தர்க்கமாகும் என்றார்.