Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Saturday, September 26, 2015

நேர்மையாக செயற்படாவிட்டால் 

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது 

சவாலாகவே காணப்படும்

நேர்மையாக செயற்படாவிட்டால்  நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சவாலாகவே காணப்படும்

25-Sep-2015
தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் முதலாவது அமர்வு 1996 இல் கேப்டவுனில் ஆரம்பமான வேளை, தென்னாபிரிக்கா நிறவெறி ஆட்சியாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட காயங்களை ஆற்றும் நடவடிக்கையில் ஏற்கனவே நீண்ட தூரம் பயணித்திருந்தது.
1948 முதல் அந்த நாட்டை ஆண்டு வந்த நிறவெறி ஆட்சியாளர்களை சர்வதேசஅளவில் தனிமைப்படுத்தி இறுதியில் அவர்களை அதிகாரத்திலிருந்தே அகற்ற முடிந்தமை குறித்து கறுப்பினத்தவர்கள் அதிக நம்பிக்கை கொண்டிருந்தனர். நெல்சன் மண்டேலா பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதியாக அவ்வேளை தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இன்று 20 வருடங்கள் கடந்த நிலையிலும் நிறவெறி காலத்தின் காயங்கள் இன்னமும் ஆழமானவையாக காணப்படுகின்றன.கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை குறித்த தனது விசாரணை அறிக்கையை வெளியிட்டிருந்தது,விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான 26 வருட கால மோதல்களில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை, குறிப்பாக உள்நாட்டுப் போரின் இறுதித் தருணங்களில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் போர்க் குற்றங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளது.2009 இல் சரணடைய இணங்கிய பின்னரும் விடுதலைப்புலிகள் படையினரால் தாக்கப்பட்ட தாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் குற்றங்களுக்கு யார் பொறுப்பாளிகள் என்ற விவரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெறாத போதிலும்,முன்னாள் ஜனாதிபதியும், அவரைச் சுற்றியிருந்தவர்களுமே முக்கிய குற்றவாளிகள் என்ற எண்ணம் பலரின் மனதில் காணப்படுகின்றது.
இந்தத் துயரத்திலிருந்து நகர்ந்து எவ்வாறு நாட்டின் காயங்களை ஆற்றுவது என்பதே இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியான விவகாரம்,தற்போதைய அரசில் முன்னாள் இராணுவ அதிகாரிகளின் செல்வாக்கு இன்னமும் காணப்படுவதால் இந்த நெருக்கடி இன்னமும் தீவிரமானதாகக் காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சர்வதேச சட்டத்தரணிகள், நிபுணர்கள், நீதிபதிகள் உள்நாட்டு நீதித்துறையினருடன் இணைந்து செயற்படும் கலப்பு நீதிமன்றமொன்றுக்குப் பரிந்துரை செய்துள்ளது இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் நல்லெண்ண நடவடிக்கைகள் இவ்வாறான கலப்பு நீதிமன்றத்தின் செயற்பாடுகளுக்குத் துணைபோவதாகவும் அதனை வலுப்படுத்துவதாகவும் அமையக்கூடும்.
நாட்டின் வலிமிகுந்த கடந்த காலங்களுக்கும் நல்லிணக்கத்துக்கும் தீர்வைக் காணக்கூடிய உள்நாட்டுச் சீர்திருத்தங்கள் குறித்த வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்தவர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இடை மாறுபாட்டு கால நீதியின் நான்கு தூண்களான உண்மை,நீதி, நஷ்ட ஈடு மற்றும் மீளநிகழாமை ஆகியவற்றை உறுதி செய்வதற்கான உள்நாட்டுப் பொறிமுறை ஏற்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய நாடுகளின் அறிக்கை வெளியான அதேகாலப்பகுதியில் தனது அரசு தென்னாபிரிக்கப் பாணியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்தும் என சிறிசேன அறிவித்தார், இலங்கையின் மனித உரிமை அரச சார்பற்ற அமைப்புகள் நீண்ட காலமாக இதற்கான வேண்டுகோளை விடுத்துவந்தபோதிலும், ராஜபக்ச அதனை நிராகரித்து வந்தார்.
தென்னாபிரிக்காவின் நல்லிணக்க மாதிரி சர்வதேச அளவில் மிகவும் மதித்துப் பின்பற்றப்படுகின்ற ஒரு விடயம், ஆனால் இலங்கையில் அதனை முன்னெடுக்க முடியுமா? இலங்கையில் அது சாத்தியமா?
இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டறிவதற்கு 1990 களில் தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எவ்வாறு செயற்பட்டது எனப் பார்ப்பது அவசியம்.
தென்னாபிரிக்காவின் ஆணைக்குழுவுக்கு 1960 முதல் 1994 வரை இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை முன்னெடுப்பதற்கான ஆணை வழங்கப்பட்டிருந்தது, பாதிக்கப்பட்ட வர்களின் சுயகெளரவத்தை மீள ஏற்படுத்துதல், தனிநபர்களையும் சமூகத்தையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்துதல், குற்றங்களில் ஈடுபட்டவர்களின் பொதுமன்னிப்புக் கோரிக்கையைச் செவிமடுத்தல் போன்ற இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டே இந்த ஆணை வழங்கப்பட்டிருந்தது.
அக்காலப்பகுதியில் 7112 பேர் பொது மன்னிப்புக்காக  விண்ணப்பித்தபோதிலும் 849 பேருக்கே அது வழங்கப்பட்டிருந்தது.உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் விசாரணைகள் மூலம் வெளிவந்த விடயங்களுக்கு தென்னாபிரிக்க அரசு பதிலளித்த வேகமே இன்றும் உலகம் முழுவதிலும் அதிகம் சுட்டிக்காட்டப்படும் விடயமாகக் காணப்படுகின்றது . 
இதன் பின்னர் இனமோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக தென்னாபிரிக்காவின் மாதிரியைப் பின்பற்ற முனைவது பரவலாக இடம்பெற்றுள்ளது.
இதில் அந்த நாடுகள் வெவ்வேறு அளவுக்கு வெற்றியைப் பெற்றுள்ளன.
ருவாண்டா, பொஸ்னியா, உட்பட பல நாடு களுக்கு  தென்னாபிரிக்க நீதிபதிகள் தமது பாணியை ஏற்றுமதி செய்துள்ளனர்.துனிசியா இந்த வருடம் தனது உண்மை மற்றும் கெளரவத்துக்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. அராபிய புரட்சி மூலம்  அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்ட பென் அலியின் ஆட்சியின் கீழ் தாங்கள் எதிர்கொண்ட அநீதிகள் குறித்து பொதுமக்கள் பகிரங்க சாட்சியங்களை அளித்து வருகின்றனர்.
இலங்கையின் தற்போதைய அரசு  தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைப் பின்பற்றி நேர்மையான விவாதம் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ள போதிலும்,பல விடயங்கள் அதனை முன்னெடுப்பதற்குத் தடையாகக் காணப்படுகின்றன.
இலங்கையின் வடகிழக்கு இன்னமும் இராணுவமயப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றது. ஊடகங்கள் தொடர்ந்தும் ஓடுக்கு முறைக் குள்ளாகின்றன, விடுதலைப்புலிகளுடனான மோதலில் ஈடுபட்ட இராணுவ வீரர்களைக் கொண்ட படை யணிகள் இன்னமும் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு  அனுமதிக்கப்பட்டுள்ளன.தென்னாபிரிக்காவில் சாட்சிகளைப் பாதுகாத்தல் என்பது முக்கியத்துவம் அற்ற விடயமாகக் காணப்பட்டது, எனினும் இலங்கையில் இது மிகவும் முக்கியமான விடயமாகக் காணப்படும்.
மேலும் ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மிகவும் மோசமாகப் பலவீனப்படுத்தப்பட்டன. இந்தக் கட்டமைப்புகளே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு முக்கியமானவையாக அமையப்போகின்றன.உலகின்  ஒவ்வொரு போருக்குப் பிந்திய சூழலிலும் தென்னாபிரிக்கா முதல் கொசோவா வரை போரின்  ருசி மிக நீண்ட காலம் விலகாமல் நீடித்துள்ளது உண்மை, இலங்கையின் அனுபவமும் இதிலிருந்து வேறுபட்டதில்லை, எனினும் மோதல் இன்னமும் பின்னணியில் எரிந்துகொண்டிருப்பதே கவலையளிக்கின்றது.
இலங்கையின் அரசியல் கட்டமைப்புகள் இன்னமும் புத்துயிர் பெறவில்லை, இது உரிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கடுமையான முயற்சிகள் தேவைப்படும் என்பதைப் புலப்படுத்தியுள்ளது.இலங்கையர்கள் இந்த முயற்சியில் நேர்மையுடன் ஈடுபட்டால் அவர்களது உதாரணமும் தென்னாவிரிக்காவின் உதாரணத்தைப் போன்று மிகவும் ஆழம் மிக்கதாக விளங்கும்.
உலகம் தீவிரமோதல்களின் பிடியில் சிக்கியுள்ள இந்தத் தருணத்தில் சமாதானத்தை எப்படி வெற்றிகொள்ளலாம் என விடயத்தை செய்து காட்டவேண்டிய தேவை மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றது,சர்வதேச சமூகமும் இதற்கு என்ன விலையையும் செலுத்தித் தனது ஆதரவை வழங்கவேண் டும்.
- ரஜீபன்