நாட்டில் மீண்டும் உருவாகியுள்ள வெள்ளை வான் கலாசாரத்தின் பின்னணி என்ன? மகிந்த ஆட்சியில் தொடர்ந்தது போன்று மைத்திரி ஆட்சியிலும் தொடர்கதையாக இருக்கின்றதா என சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்த வெள்ளை வான் கலாசாரத்தை உருவாக்கியவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோரே என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட் கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறுகையில்;
தமிழ் மக்களுக்கு உரித்தான 767 வாகனங்களை இராணுவத்தினர் கைப்பற்றியிருக்கின்றனர். அவை அனைத்தும் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானவை என்பதாலேயே தாம் வைத்திருப்பதாகக் கூறுகின்றனர்.
ஆனால் பெரும்பாலானவை பொது மக்களுக்குச் சொந்தமானவை. இப்போதுதான் வாகனங்கள் தொடர்பான உண்மை இராணுவத் தரப்பில் இருந்து வெளிவந்திருக்கின்றது.
இவ்வாறான நிலையிலேயே கடந்த வாரம் வெள்ளை வானொன்றும் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. ஆனால் அது தொடர்பில் உண்மை வெளிப்படுத்தப்படாமையால் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு கடந்த காலங்களில் வெள்ளை வான் கலாசாரத்தை ஏற்படுத்திய கோதாபய மீண்டும் வெள்ளை வான் கலாசாரத்தை உருவாக்க முற்படுகிறாரா என எண்ணத் தோன்றுகிறது.
ஆனால் மறுபக்கம் வெள்ளை வானை தங்கள் இடங்களில் கண்டவுடன் கோதாபய ராஜபக்ஷ பயப்படுகின்றார். ஏனென்றால் வெள்ளை வான் மூலம் நடைபெறும் செயல்கள் அவருக்குத் தெரியும்.
தமிழ் இளைஞர், யுவதிகள் வெள்ளை வான்கள் மூலம் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை அவர் நன்கு அறிவார். இதனால் அதன் பயத்தை உணர்ந்து வெள்ளை வான் தொடர்பில் அச்சம் கொள்கின்றார்.
கடந்த காலங்களில் வெள்ளை வானில் வடக்கு, கிழக்கு, கொழும்பு உள்ளிட்ட இடங்களில் பலரும் கடத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களது பெற்றோர்கள் இன்றும் தேடி அலைந்து திரிகின்றனர்.
அதனைக் கண்டுகொள்ளாத மகிந்த மற்றும் கோதா இன்று மட்டும் வெள்ளை வானைக் கண்டவுடன் அஞ்சுவது ஏன்? வெள்ளை வான் தொடர்பில் தெரியும் என்பதாலா அல்லது வெள்ளை வானை மீண்டும் உருவாக்க முற்படுவதற்கா?
அதேவேளையில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டது. இராணுவத்தினருக்கு பாதுகாப்பிற்காக இலக்கத்தகடுகள் அற்றதும் இலக்கத்தகடுகள் மாற்றப்பட்டதுமான வாகனங்களை பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகின்றது.
இவ்வாறு அந்த வெள்ளை வான் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்காது இந்த அரசும் செயற்படுமாயின் இதற்கு மைத்திரி அரசும் உடந்தையா என்ற சந்தேகம் எழுகின்றது என்றார்.