யாழில் மீண்டும் ஒரு அவலம் : சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞன் தலைமறைவு

Submitted by MD.Lucias on Wed, 05/27/2015
யாழ்ப்பாணம், நாரந்தனை வடக்கு தம்பாட்டி பகுதியில் 13 வயதுடை சிறுமி ஒருவர், 23 வயதுடைய இளைஞர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

தாயும், தந்தையும் பிரிந்து தனது பாட்டியுடன் யாழ்ப்பாணம் நாரந்தனை வடக்கு தம்பாட்டி பகுதியில் வசித்து வந்த 13 வயதுடைய சிறுமியை அப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளார்.
இது தொடர்பில் சிறுமியின் பாட்டிக்கு தெரியவந்ததையடுத்து சிறுவர் பாதுகாப்பு சேவையின் அவசர இலக்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து சிறுவர் பாதுகாப்பு சேவையினர், சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதன் பின்னர் சிறுமியை உடனடியாக மீட்டு சந்தேகநபரை கைது செய்யுமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய சிறுமி மீட்கப்பட்டு சட்ட வைத்தியதிகாரியின் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர், தலைமறைவாகியுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.