வெள்ளை வான் கடத்தல்களுடன் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மூவருக்கு தொடர்பு
கடந்த அரசின் காலக்கட்டத்தில் ஊடகவியலாளர்கள், அரசியல் வாதிகள், சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை கடத்திச்சென்று காணாமல் போனோர் குறித்து வெள்ளை வான் நடவடிக்கைகளில் பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் மூவர் தொடர்புபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் தொடர்பிலான இரகசிய அறிக்கைகள் இரண்டு, அடுத்த வாரம் நடைபெறவிருக்கின்ற பாதுகாப்பு சபையில் முன்வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி, பிரதமர், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு படைகளின் முக்கியஸ்தர்கள் இந்த பாதுகாப்பு சபையில் பங்கேற்பர்.
வெள்ளை வான் நடவடிக்கை தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படைகளின் முக்கியஸ்தர்கள் மூவரில் இருவர் ஓய்வு பெற்றுவிட்டதாகவும் அவர்கள் தொடர்பிலும் அவர்களின் செயற்பாடுகள் குறித்தும் தனியான இரகசிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போது சேவையில் இருக்கின்ற மேஜர் தரத்தைச்சேர்ந்த அதிகாரி தொடர்பில் தனியான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த இரகசிய அறிக்கைகள் இரண்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்படவிருப்பதாக மக்கள் சமாதானம் அமைச்சு அறிவித்துள்ளது.