வடக்கில் தமிழர்கள் வாக்களிப்பதனை தடுக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது : ராஜித சேனாரத்ன
Thu, 01/01/2015
வடக்கில் உள்ள தமிழ் மக்களை இராணுவத்தின் மூலம் அச்சுறுத்தி தமிழர்களின் வாக்களிப்பினை தடுக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என குற்றம் சுமத்தும் பொது எதிரணி, அடக்குமுறைகளை கட்டவிழ்த்தாலும் மக்கள் மாற்றத்திற்காக வேண்டி வாக்களிப்பார்கள் எனவும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்;
பொது எதிரணியின் பயணம் இன்று மிக பலமானதாகவும் மக்களின் நம்பிக்கையினை பெற்றதாகவும் அமைந்துவிட்டது. ஏழு பேருடன் ஆரம்பித்த எமது பயணத்தில் இன்றுடன் இருபத்து நான்கு முக்கிய உறுப்பினர்களும் பல நூற்றுக்கணக்கான பிரதேச சபை உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் இணைந்துவிட்டனர். இது இன்னும் தொடரும். இலங்கையின் அரசியல் வரலாறு கடந்த காலங்களில் பல பாடங்களை கற்பித்துக்கொடுத்துள்ளது. 1964முதற்கொண்டு 2004 வரையில் அரசில் இருந்து பலர் வெளியேறியுள்ளனர். இதில் பல சந்தர்ப்பங்களில் அரசில் இருந்து வெளியேறிய பின்னர் அரசாங்கத்தை வீழ்த்திய வரலாறுகளையும் நாம் பார்த்துள்ளோம். எனினும் இம்முறை இலங்கை வரலாற்றில் மிக அதிகமான அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறி அரசாங்கத்திற்கு எதிராக பலமானதொரு பொது எதிரணியினை உருவாக்கியுள்ளோம். நிச்சயமாக இது நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி விடும்.
மேலும் எமது கருத்துக்களையும் தாண்டி புலனாய்வு பிரிவின் தகவல் கூட அரசாங்கத்திற்கு பாதகமான பெறுபேற்றினை பெற்றுக்கொடுத்துள்ளது. புலனாய்வுப் பிரிவின் தகவல்களுக்கு அமைய 48 வீத மக்களின் ஆதரவு மைத்திரிபால சிறிசேனவிற்கும் 37 வீத ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கும் 14 வீத மக்கள் முடிவு யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்திலும் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுதவிர 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதிக்கு கிடைத்த வாக்குகளில் 23 வீதமான வாக்குகள் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றது. எனவே இதுவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் வீழ்ச்சிக்கு நல்லதொரு உதாரணமாக கொள்ள முடியும். மக்கள் அலை தற்போது மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் திரும்பியுள்ளது.
வடக்கில் அச்சுறுத்தல்
மேலும் தமிழ் மக்களை அச்சுறுத்தி தமிழ் மக்கள் வாக்களிப்பதனை தடுக்கும் முயற்சியினை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. வடக்கில் உள்ள இராணுவத்தையும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிப்பிரதேசங்களில் உள்ள இராணுவத்தையும் சிவிலியன்களாக பயன்படுத்தி வடக்கில் ஒவ்வொரு கிராமங்களுக்குமாய் அனுப்பி தமிழ் மக்களை அச்சுறுத்துவதுடன் தமது வாக்களிப்பினை தடுக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. எனினும் தமிழ் மக்களின் ஆதரவு எப்படியும் எமக்கு கிடைக்கும். அச்சுறுத்தல்கள் மிரட்டல்களுக்கு அஞ்சி மக்கள் வாக்களிப்பினை நிராகரிக்க மாட்டார்கள்.
மேலும் சர்வதேச புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பு இருப்பதாக அரசாங்கம் சித்திரிக்கின்றது. அதே போல் பொது எதிரணி உறுப்பினர்களின் வங்கிக் கணக்கிற்கு சட்டவிரோத பணப் பரிமாற்றத்தினை செய்து எம்மை புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பு இருப்பதாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். எனவே இறுதித் தினங்களில் இது நடந்தால் எமது வங்கிக் கணக்குகளுக்கு பணம் பரிமாற்றப்படுமாயின் அதற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.