Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Wednesday, January 28, 2015


யோ.நிமல்ராஜ்-2015-01-28
அரசியல் கைதிகள், உயர்பாதுகாப்பு வலயம், காணிகளை மக்களிடம் கையளித்தல், காணிகள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும் பிரச்சினைகளை கையாள்வதற்கென அரசாங்கம் உயர் மட்டக் குழு ஒன்றை நியமிக்கவேண்டுமெனவும் அரசினால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதே அக் குழுவின் பிரதான நடவடிக்கையாக அமையவேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேசிய நிறைவேற்று சபைக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக வினவியபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;

தேசிய நிறைவேற்று சபையின் இன்றைய (நேற்றைய) அமர்வில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டது. வடக்கு,கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இன்றைய பிரச்சினைகள் தொடர்பாக நாம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். 

யாழ்ப்பாணத்தில் குறிப்பாக வலிகாமத்தில் காணப்படும் உயர் பாதுகாப்பு வலயங்களில்  உள்வாங்கப்பட்டுள்ள காணிகளை விடுவித்து மக்களிடம் கையளித்தல் மற்றும் குடாநாட்டில் புதிதாக காணிகளை கையகப்படுத்தும் விவகாரங்கள் தொடர்பாக எமது நிலைப்பாட்டினை தெரிவித்திருந்தோம். 

அதேபோல கிழக்கு மாகாணத்திலும் பரவலாக காணிப்பிரச்சினைகள் உண்டு. குறிப்பாக சம்பூரில் உள்ள காணிப்பிரச்சினை தொடர்பாக ஆராயப்பட்டது. 

அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சகல மாவட்டங்களிலும் காணிகள் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் உண்டென்பதனை சுட்டிக்காட்டியிருந்தோம்.

இக்காணிகளை சரியான வழிமுறை ஊடாக மக்களிடம் கையளிக்க வேண்டிய தேவையுள்ளதனை அரசிடம் வலியுறுத்தியிருந்தோம். 

அதேவேளை, யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீரில் எண்ணெய் கழிவுகள் கலப்பதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் சுட்டிக் காட்டப்பட்டதுடன் இவ்விவகாரம் மக்களின் மிக முக்கியமான பிரச்சினையாக உள்ளதால் உடனடியாக அரசாங்கம் தக்க நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென கோரப்பட்டது. மேலும் மணல் அகழ்வு தொடர்பாக குடாநாட்டில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பாதிப்புக்கள், குழப்பங்கள் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டதுடன் இவ்விடயத்திலும் சரியானதொரு அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டுமென கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்தது. 

பல வருடங்களாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை  விவகாரத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டுமெனவும் எம்மால் இங்கு கோரப்பட்டது. 

அத்துடன் கிழக்கு பல்கலைக்கழகத்தில் காணப்படும் நிர்வாக ரீதியிலான  குளறுபடிகள் மற்றும் அதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கையில்  ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தெளிவாக கூறியிருந்தோம். இவ்விவகாரத்தில் அரசாங்கம் காலதாமதமின்றி தக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டது. 

இவ்வாறாக வடக்கு, கிழக்கு மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தேசிய நிறைவேற்று சபையின் அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது. 

ஆனால் வடக்கு , கிழக்கு விடயங்களை கையாள்வதற்கான ஒரு குழுவினை அமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதே எமது குறிக்கோளாக இருந்தது. இதற்காக பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் தொடர்பாக முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படும். 

பல்லாண்டு காலமாக நாம் எமது பிரச்சினைகள் தொடர்பாக பேசிய வண்ணமே உள்ளோம். வெறுமனே பேச்சுக்கள் மூலம் எந்தவிதமான பலன்களும் கிடைக்கப்போவதில்லை. 

உயர் மட்ட சந்திப்புகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை கையாள்வதற்கென ஒரு குழு நியமிக்கப்பட்டு அக்குழு அவ்விடயங்கள் சம்பந்தமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். விரைவில் இக்குழு நியமிக்கப்படவுள்ளது. 

எமது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் விரைவில் குழு ஒன்றினை நியமிப்பதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளது.  பேசப்படும் விடயங்கள், 
தீர்மானங்கள் தொடர்பான பல்வேறு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே இக்குழுவினை நியமிப்பது தொடர்பான  எமது நோக்கம்.