ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் எமக்கு பாதகமாக அமையும்: விக்கிரமபாகு கருணாரத்ன

PUBLISHED: 18:12 GMT, DEC 24, 2014
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் எமக்கு பாதகமாக அமையும் எனன லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமை தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைவர்கள் என்ற வகையில் நாம் உங்களிடம் கோரிக்கை வைக்க எனக்குத் தகுதி உள்ளது. நாம் முன்னெடுத்துச் செல்லும் சுதந்திரமானதும், ஜனநாயகத்திற்குமான இந்தப் போராட்டத்திலேயே நாம் அடியெடுத்து வைத்துச் செல்வதற்கான பாதை உள்ளது.
நாம் அந்தப் போராட்டத்தை வெற்றி கொள்ள வேண்டுமானால் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களிக்க வேண்டும். இதன் மூலமே அடுத்த கட்டம் நோக்கி பயணிக்க முடியும். இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்குக் கூறுகின்றோம் தெற்கு மக்களின் போராட்டமானாலும் உங்களுக்குப் பொறுப்பு உள்ளது.
தமிழ் மக்களின் சுதந்திரம்,தமிழ்மக்களின் ஜனநாயக உரிமை,தமிழ் மக்களின் தேசிய போராட்டம் குறித்து தொடர்ந்தும் பேசுவதற்கு தேவை இருக்கின்றது.அதனைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இந்த பாசிஷ இனவாத ஏகாதிபத்திய ஆட்சியை விரட்டினால் மாத்திரமே ஏற்படும்.
அதனை நோக்கி நகரும் எமது போராட்டத்திற்கு தமிழ் மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் எமக்கு பாதகமாக அமையும்.அதனால் தமிழ் மக்களின் தலைவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.குறிப்பாக பொன்னம்பலம் அவர்கள் உட்பட தேர்தலை புறக்கணிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள சகல தலைவர்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.