Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Friday, December 19, 2014

ஆளுநரும், பிரதம செயலாளரும் சட்டவிரோதமாக பதவியில் இருந்துள்ளனர்: சி.வி


-யோ.வித்தியா

13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக வடமாகாண சபை உருவாக்கப்பட முன்னர் கடந்த 5 வருடங்களாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் ஆகியோர் சட்டவிரோதமான முறையில் பதவியில் இருந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வு கடந்த புதன்கிழமை (17) தொடக்கம் வெள்ளிக்கிழமை (19) வரையில் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இடம்பெற்றது.

வடமாகாண பிரதம செயலாளர், ஆளுநர் ஆகியோர் ஒரு முறைமையின் கீழ் அரசுக்கு சார்பாக நடந்துகொள்வதாக கடந்த புதன்கிழமை (17) நடைபெற்ற அமர்வில் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.

எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா வியாழக்கிழமை (18) நடந்த அமர்வில் கருத்துக்கூறுகையில், பிரதம செயலாளர் ஒரு முறைமையில் கீழ் அரசுக்கு சார்பாக நடந்துகொள்கின்றார் என முதலமைச்சர் கூறியதை பார்க்கையில், அவர்கள் இடத்தில் வேறொருவரை மாற்றும் போது, அவர்களும் அவ்வாறு தானே நடந்துகொள்வார்கள் என தெரிவித்தார்.

தவராசாவின் கருத்துக்கு முதலமைச்சர் வெள்ளிக்கிழமை (19) அமர்வில் விளக்கமளிக்கையில், 'வட மாகாண சபை உருவாக்கப்பட முன்னர் ஆளுநரும், பிரதம செயலாளரும் பதவியில் இருந்தமை பிழையான விடயம். மாகாண சபை சட்டத்தின் படி அவர்கள் சட்டத்துக்கு முரணான விதத்தில் பதவியில் இருந்துள்ளனர் என்று கூறலாம். 

மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட பின்னரே ஆளுநர், வடமாகாண பிரதம செயலாளர் ஆகியோர் பதவியேற்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், அவர்கள் வடமாகாண சபை உருவாக்க முன்னரே ஐந்து வருடங்களுக்கு பதவியில் இருந்துள்ளனர். அவர்களை மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென முதலமைச்சர் தெரிவித்தார்.