2014-12-19 11:11:25 | Leftinraj

விமல் வீரவன்ச, சுசில் பிரேமஜயந்த, மஹிந்தானந்த அளுத்கமகே, உதய கம்மன்பில என்று ஒரு கூட்டமே இதை திரும்ப, திரும்ப பேசி வருகிறது.
இவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். உண்மைதான், எமக்கு ஒப்பந்தம் இருக்கின்றது. அதுவும் இரகசிய ஒப்பந்தம் அல்ல பகிரங்க ஒப்பந்தமே இருகின்றது. ஆனால், எமது ஒப்பந்தம் கூட்டமைப்புடன் அல்ல. எமது ஒப்பந்தம், கூட்டமைப்புக்கு வாக்களித்த வடக்கில் கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடன்தான் இருக்கின்றது என அவிசாவளையில் நேற்று மாலை நடைபெற்ற எதிரணி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் கலந்துக்கொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மனோ மேலும் கூறியதாவது;
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் வடக்குக்கு வாக்கு தேடி போயுள்ளார். மகிந்தவுக்கு யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும், முல்லைத்தீவுக்கும், மன்னாருக்கும்,கிழக்கிலே மட்டக்களப்பிற்கும், திருகோணமலைக்கும், அம்பாறைக்கும் சென்று வாக்கு கேட்க முடியும் என்றால், எங்களுக்கு வடக்கிற்கும், கிழக்கிற்கும் சென்று வாக்கு கேட்க முடியாதா?
வடக்கு கிழக்கு இரண்டுமே இந்த நாட்டின் மாகாணங்கள். அங்கே வாழும் 16 இலட்சம் தமிழர்களில் பத்து இலட்சம் பேர் வாக்காளர்கள். அவர்களின் பெயர்கள் இந்த நாட்டு தேர்தல் ஆணையாளரின் வாக்காளர் இடாப்பில் உண்டு. ஆகவேதான் அவர்களின் வாக்குகளை நாங்கள் நாடுகின்றோம். ஆகவேதான் அந்த மக்களுடன் நமக்கு பகிரங்கமாக ஒப்பந்தம் இருக்கின்றது என்று இந்த மேடையில் இருந்து பகிரங்கமாக கூறுகிறேன்.
ஒப்பந்தம் ஒன்றை செய்து மகிந்தவை தொடர்ந்து ஆட்சியில் அமர்த்தி தாலாட்டு பாட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் முட்டாள்கள் அல்ல. நாங்களும் முட்டாள்கள் அல்ல. இந்த தேர்தல் பாராளுமன்ற தேர்தல் அல்ல. மாகாணசபை, உள்ளூராட்சி தேர்தலும் அல்ல. இது ஒரு தேசிய தேர்தல். இன்றுஇ முழு நாடுமே ஒரு தேர்தல் மாவட்டமாக மாறிவிட்டது. இதில் பல சின்னங்கள் இல்லை. விருப்பு வாக்கு இலக்கங்கள் இல்லை. பத்தொன்பது பேர் போட்டியிட்டாலும், போட்டி இரண்டு பேருக்கு இடையில்தான். அது வெற்றிபெறும் மைத்திரிபால சிறிசேனவுக்கும், தோல்வியடையும் மகிந்த ராஜபக்சவுக்கும்தான். மைத்திரியின் சின்னம், அன்னம் என்ற எங்கள் சின்னம். மகிந்தவின் சின்னம் வாயில் போட்டு மெல்லும் வெற்றிலை என்ற சின்னம்.
இது இன்று முழு நாடும் அறிந்த தகவல். வடக்கின், கிழக்கின், மலையகத்தின், இங்கே மேலகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர்ந்துவிட்ட தகவல். இந்த தகவலை மேலும் விளக்க நாளை முதல் மலையகம், வடக்கு, கிழக்கு மாவட்டங்களுக்கு எதிரணி தலைவர்களுடன் நான் வருவேன்.
இங்கே எனது மாவட்டம் கொழும்பையும், கம்பஹாவையும் எனது உண்மை தம்பிமார்கள் பார்த்துக்கொள்வார்கள். கொழும்பு, கம்பஹா மாவட்ட தமிழ்ப் பேசும் மக்கள் எனது மக்கள். இவர்கள் மீது எந்த ஒரு சாத்தானும் கைவைக்க முடியாது. இங்கே வாழும் எனது மக்கள் என்னை கைவிடமாட்டார்கள் என்பது தினசரி காலையில் சூரியன் உதிப்பதைபோல்இ திட்டவட்டமான உண்மை. நாடு முழுக்க ஒலிக்கும் ”அன்னம் எங்கள் சின்னம்” என்ற கோஷத்தை இன்னமும் வலுவாக உறுதிப்படுத்திவிட்டுத்தான் வீடு திரும்புவேன்.