Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Thursday, December 11, 2014

2014-12-11 11:21:59 | General
Thavam Ratnaஜனநாயகமும் மனிதாபிமான முகத்துடனான பொருளாதார அபிவிருத்தியும் சமாந்தரமாக மேம்பாடுகாணும் போதே நாடொன்று சுபிட்சமடைய முடியும். ஆனால் எதிர்வரும் ஜனவரி   8 இல் இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் இரு பிரதான அரசியல் முகாம்களும் தேர்தலுக்காக முன்வைத்துவரும் சுலோகங்களை அவதானிக்கையில் ஜனநாயகத்துக்கும் அபிவிருத்திக்கும் இடையிலான   மோதலே மேலெழுந்து கொண்டிருப்பதாக தென்படுகிறது. மத்தியில் குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தினூடாக ஸ்திரத்தன்மையையும் அபிவிருத்தியையும் நாட்டு மக்கள் விரும்புகின்றனரா அல்லது ஜனநாயகம் மற்றும் சகல இனங்களையும் உள்ளீர்த்துக் கொண்ட கட்டமைப்பை நாடுகின்றனரா என்ற பரீட்சைக்களம் இலங்கை மக்களை எதிர்நோக்கியிருப்பதாக தோன்றுகிறது. ஆளும் ஐக்கிய  மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷ,  அபிவிருத்தியையும் ஸ்திரத்தன்மையையும் வலுவான முறையில் மத்தியில் அதிகாரம் குவிந்துள்ள அரசாங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

பயங்கரவாதமோ, இன ரீதியான பிரிவினைவாதமோ எந்தவிதத்திலும் தலை தூக்க இடமளிக்கப்போவதில்லையென அவரின் அரசாங்கம்  சூளுரைத்து வருவதுடன் மனித உரிமை விவகாரங்களை முன்னிறுத்தி நாட்டை பலவீனப்படுத்த மேற்குலகு முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டி வருகிறது. பலமாக மத்தியில் குவிந்திருக்கும் அதிகாரத்தினூடாக அரசாங்கம் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தாழ்ந்த மட்டத்திலுள்ள நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோரை குறிப்பாக தென்னிலங்கை கிராமப் பகுதி மக்களை அதிகளவுக்கு ஆகர்சித்திருப்பதாக காணப்படுகிறது. அதேசமயம் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க., அரசிலிருந்து வெளியேறியுள்ள  ஜாதிக ஹெல உறுமய, சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி, அரசிலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளரும் தற்போது ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களத்தில் குதித்துள்ளவருமான மைத்திரிபால சிறிசேனவின் அணியில் உள்ளவர்கள் ஆகிய தரப்பினரை உள்ளடக்கிய எதிரணி முகாம் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்களை வழங்கும்  18 ஆவது திருத்தம் போன்ற எதேச்சாதிகாரத்திற்கு வழிவகுக்கும் கட்டமைப்புகள்  நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இத்தகைய சீர்திருத்தங்களை மேற்கொள்ளாவிடின் ஜனநாயகம் மோசமாக பாதிக்கப்பட்டு விடுமெனவும் அதனை தடத்திற்கு கொண்டு வர முடியாத நிலைமை ஏற்பட்டுவிடுமெனவும் அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், பயங்கரவாதத்தை ஒழித்து பொருளாதார அபிவிருத்திக்கு அவசியத் தேவையான சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் சிறுமைப்படுத்தும் பாதையில் எதிரணி செல்வதாக அரசாங்கம் கூறுகின்றது.

நாட்டுக்காக எதனையுமே ஆட்சியிலிருந்த போது செய்யாதவர்களே எதிரணியில் இருப்பதாக ஜனாதிபதி  ராஜபக்ஷ சுட்டிக்காட்டுகிறார். அவர்களால் யுத்தத்தில் வெற்றி பெறவோ அல்லது நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லவோ முடிந்திருக்கவில்லை என்பதையும் அவர் வாக்காளர் மத்தியில் முன்வைத்து வருகிறார். ஆனால், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க விரும்பினால்  அது தொடர்பாக பாராளுமன்றத் தெரிவுக் குழு மூலம் பேச முடியுமெனவும் தெரிவுக் குழு பரிந்துரைத்தால் அதுபற்றி ஆராய முடியுமென்ற கருத்தை முன்வைத்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. மத்தியில் குவிக்கப்பட்ட அதிகாரத்தினால் பொதுமக்களுக்கு அனுகூலங்களிலும் பார்க்க பிரதி கூலங்களே அதிகம் என்பதை அறிந்திருப்பதன் வெளிப்பாடாக  இக்கருத்து காணப்படுகிறது.  எவ்வாறாயினும் அபிவிருத்திக்கும் ஜனநாயகத்துக்கும் இடையிலான சமராகவே தேர்தல் களம் உருவாகி வருவதாக தோன்றுகிறது.