நிபந்தனை அடிப்படையில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்– TNA: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
30 அக்டோபர்
நிபந்தனை அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழர் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுத் திட்டம் காண்பது குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் ஜனாதிபதி மூன்று தடவைகள் வெளியிடப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் யுத்தத்தின் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது ஜனாதிபி, 13ம் திருத்த்ச சட்டத்தை அமுல்படுத்துவதாகவும், விரிவான பேச்சுவார்த்தை நடத்த முடியும் எனவும் உறுதிமொழி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் தனி இராச்சிய கோரிக்கை முன்வைக்கவில்லை எனவும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென்றே கோருவதாகவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்கள் சமத்துவமான இலங்கையர்களாகவே வாழ விரும்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காண விரும்புவதாகவும் எனினும் இந்த தீர்வுத் திட்டம் கௌரவமானதாக இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப்பட்டால் மட்டுமே பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.