தமிழ்க் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுக்கு செல்லவேண்டும்: ராஜித்த

Thu, 10/23/2014
பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயக்கம் காட்டிவருகின்றது. வரலாற்று அனுபவங்களை கருத்திற்கொள்ளும் தமிழ்க் கூட்டமைப்பு சந்தேகத்தின் காரணமாக இந்த தயக்கத்தை வெளிக்காட்டுகின்றது. எனவே கூட்டமைப்பின் தயக்கத்தைப்போக்க அரசாங்கம் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும் என்று மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெற தயக்கம் காட்டும் கூட்டமைப்பிடம் தொடர்ந்தும் அதில் பங்கெடுக்குமாறு கோரிக்கை விடுப்பதில் அர்த்தம் இல்லை. மாறாக நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் குறித்து அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரட்ன மேலும் குறிப்பிடுகையில்,
வடக்கு கிழக்கில் என்னதான் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்தாலும் அரசியல் தீர்வை வழங்குவதன் மூலமே அந்த மக்களின் மனங்களை வெல்ல முடியும். இதனை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
குறிப்பாக தமிழ் மக்களின் அபிமானங்களை நிறைவேற்றக்கூடிய வகையிலான அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டியது அவசியமாகும்.
இதற்காக அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்துள்ளது. அனைத்துக்கட்சிகளினதும் பங்குபற்றுதலுடன் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றை நோக்கி நகர்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு சிறந்த இடமாகும்.
ஆனால் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயககம் காட்டிவருகின்றது. வரலாற்று அனுபவங்களை கருத்திற்கொள்ளும் கூட்டமைப்பு சந்தேகத்தின் காரணமாக இந்த தயக்கத்தை வெளிக்காட்டுகின்றது.
எனவே கூட்டமைப்பின் தயக்கத்தைப்போக்க அரசாங்கம் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன்.
குறிப்பாக என்னதான் கூறினாலும் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கு பாரிய தயக்கத்தைக் கொண்டுள்ளமை தெளிவாகிவிட்டது. எனவே தயக்கத்தை போக்குவதற்காக இருதரப்பு பேச்சுக்களை நடத்துவதே ஒரே வழியாகும்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெற தயக்கம் காட்டும் கூட்டமைப்பிடம் தொடர்ந்தும் அதில் பங்கெடுக்குமாறு கோரிக்கை விடுப்பதில் அர்த்தம் இல்லை. மாறாக நம்பிக்கையை ஏற்படுத்துவதே இங்கு முக்கியமானதாகும் என்றார்.