Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Monday, October 27, 2014

[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 02:21.27 PM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையாளர் அறிவித்தால், அவரை வீட்டுக்காவலில் வைக்கப்படலாம் என நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட் அவரது இடத்திற்கு கொண்டு வரப்படலாம் எனவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள ஊடகவியலாளர் ஒருவரின் சகோதரராவர் என்பதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.
தேர்தல் ஆணையாளர் தனது சகோதரரான ஊடகவியலாளருடன் கடந்த காலங்களில் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து பாதுகாப்பு பிரிவினர் தேடி வருவதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் சிறிய கட்சிகள் தேர்தல் ஆணையாளரை சந்திக்க செய்து அவருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையாளர்,
யார் தேர்தலுக்கு தயாரானாலும் நாங்கள் தயாரில்லை. அத்துடன் இதுவரை எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
அத்துடன் தயாரில்லை என்று தீயணைப்பு படையினர் போல் தயாராகாமல் இருக்கவும் முடியாது. மேலும் யார் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போகின்றனர் என்பதும் எனக்கு தெரியாது.
அதேபோல் இப்படியான விடயங்கள் குறித்து பதிலளிப்பதற்கு காலம் இருக்கின்றது. அறிவிப்பு வந்ததும் நான் சட்டத்திற்கு அமைய கடமையை செய்வேன் என தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பாப்பரசரின் விஜயம் தொடர்பில் ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன: அரசாங்கம்
பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸின் விஜயம் தொடர்பில் அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெறுவதாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
பாப்பரசர் இலங்கைக்கு வரமாட்டார் என்று வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கார்டினல் மல்கம் ரஞ்சித், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், பாப்பரசரின் விஜயம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சரின் கருத்து வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் ஆறு உறுப்பினர்களுக்கு பிணை
இலங்கை துறைமுக அதிகாரசபையின் அலுவலகத்தி;ல் அத்துமீறி பிரவேசித்தனர் என்று குற்றம் சுமத்தப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6பேரும் நீதிமன்றத்தினால் சொந்த பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த 6 பேரும் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போதே அவர்களை சொந்தப்பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஆர்.யோகராஜன், அஜித் பி பெரேரா, நளின் பண்டார, எரான் விக்ரமரட்ன உள்ளிட்டோர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் ஆறு பேரும் கடந்த 21ஆம் திகதியன்று கொம்பனிவீதியில் உள்ள ஜாதிக சேவக சங்கமய என்ற தொழிற்சங்கத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான இந்த இடத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டமையை தாம் கண்டுபிடித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரும் தெரிவித்திருந்தனர்.
அட்டனில் பாரிய மண்சரிவு - போக்குவரத்து தடை
மலையகத்தில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலையே நிலவுகின்றதனால் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜ பகுதியில் இன்றிரவு 7.30 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக சில மணி நேரம் அட்டன் பொகவந்தலவா மற்றும் அட்டன் மஸ்கெலியா ஆகிய வீதிக்கான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. தற்போது மண்சரிவு அகற்றப்பட்டு ஒரு வழி போக்குவரத்தாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முழுமையாக மண்சரிவை அகற்ற நடவடிக்கை எடுத்திருப்பதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மலையகத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக வீதிகள் வழுக்கல் தன்மையுடன் காணப்படுகின்றமையால் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடதக்கது.
இதனால் வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு வாகனசாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.