Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Friday, October 3, 2014

இதய சுத்தியுடனான  அணுகுமுறையே தேவை

2014-10-03 13:22:29 | General
வட மாகாண சபை ஒத்துழைக்குமானால் தெற்கைப் போன்று வடக்கையும் மாற்ற லாம் எனவும் இரு அரசுகளும் இணக்கத்துடன் செயற்படுமானால் முதலீடுகளை அதிகரித்து பொருளாதார முன்னேற்றத்தை காண முடியுமென்றும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் முதலீட்டு ஊக்குவிப்புத்துறை அமைச்சர்  லக்ஷ்மன்  யாப்பா அண்மையில் கருத்து தெரிவித்திருந்ததை காண முடிந்தது. அதேசமயம், யுத்தம் முடிந்த பின்னரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை அந்நியப் பிரதேசங்களாகவும் தமது கண்காணிப்புக்குள்ளாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாகவும் அரசு கருதுவதாகவும் அதனடிப்படையில் அடிப்படைச் சுதந்திரங்களில்  இடர்களை ஏற்படுத்துவதாகவும்  வட மாகாண முதலமைச்சர் சி.வி.  விக்னேஸ்வரன்  குற்றஞ் சாட்டியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. உண்மையில் வட மாகாண நிர்வாகம் மத்திய அரசுடன் ஒத்துழைத்து செயற்படாமலிருக்கின்றதெனக் கருத்துக்களைத் தெரிவிக்கும்  அரசாங்க அமைச்சர்கள் அதற்கான காரணத்தை ஆராய்ந்து பரிகாரம்  தேட  முயற்சிப்பதே ஆக்க பூர்வமானதாக தோன்றுகிறது. யுத்தம் முடிவடைந்து  5 வருடங்கள் கடந்து விட்டன. வடக்கில் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்று  மாகாண நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் அரசியல் அமைப்பின்  13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு வழங்கமறுப்பதாகவும் அந்தத் திருத்தச் சட்டம் வழங்கியுள்ள சொற்பமான நலன்களையும் வழங்காமல் அரச  நிர்வாக இயந்திரம்  இயங்கி வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள வட மாகாண  சபை நிர்வாகம் கூறி வருகிறது.

வடக்கில் கணிசமான மக்கள் முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் வாழ வழியின்றி தவித்துக் கொண்டிருக்கையில் அவர்களின் நிலங்களை கையேற்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுடன் வடக்கு மக்களுக்கு
நீடித்ததும் நிலையானதுமான அனுகூலங்களை கொடுக்கக் கூடிய திட்டங்களை அமுல்படுத்துவதிலும் பார்க்க “எடுத்ததை  சுருட்டலாம்’ என்ற  மனோபாவமே வெளிநாடுகளிலிருந்தும் தெற்கிலிருந்தும் வருகை தருபவர்களிடம் காணப்படுவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கவலை தெரிவித்திருக்கிறார்.நாட்டின் ஏனைய பிராந்தியங்களைப் போன்றே வட, கிழக்கை நடத்துவதாகவும் பாரபட்சம் எதுவும் காட்டப்படுவதில்லையெனவும் அரச தரப்பு கூறுகின்றது. ஆனால், “ஒரு கண்ணுக்கு வெண்ணெயும் மறு கண்ணுக்கு சுண்ணாம்பும் தடவும் அணுகு முறையே தொடர்வதாக தமிழ்க் கூட்டமைப்பு கூறிவருகிறது. இரு தரப்பினருக்கும் இடையிலான விரிசல் இடைவெளி மென்மேலும் அதிகரித்துச் செல்லும் நிலைமையே காணப்படுகிறது. உண்மையில் பொது மக்களினதும் ஒட்டு மொத்தமாக நாட்டினதும்   நலன்களில் மனப்பூர்வமான அக்கறை இருக்குமானால் இரு தரப்பினரும் அடிக்கடி கலந்துரையாடி அவசரமாக தீர்வு காணப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான நிகழ்ச்சித் திட்டத்தை தயாரித்து அவற்றிற்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

முன்னுரிமை கொடுத்து ஆராய்ந்து தீர்வு காண முயற்சிக்கும் போது இரு தரப்பினருக்குமிடையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு அதிகளவில்  வாய்ப்புகள் ஏற்படும். தேர்தல், வாக்கு வங்கி அரசியலே பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முடியாமல் முட்டுக்கட்டை போடுகின்றதென்பது ஊகித்துக் கொள்ளக் கூடிய விடயமாகும்.  அதேநேரம்  மாகாண சபைக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை அவை முழுமையாக அமுல்படுத்துவதற்குரிய நிர்வாக, நிதி சார்ந்த ஒத்துழைப்பையும் உதவிகளையும் அரசாங்கம்  வழங்க வேண்டும். இந்த உதவிகள், யுத்தத்தாலும் இடம்பெயர்வாலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பிரதேசங்கள் என்பதால் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியவை என்ற தார்மீக சிந்தனையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். மத்தியிலுள்ள ஆளும் கட்சியின்வசம் ஏனைய 8 மாகாண சபை நிர்வாகங்களும் இருக்கும் நிலையில் வட மாகாண
சபை மட்டுமே பாராளுமன்றத்தில் எதிரணியிலுள்ள தமிழ்க் கூட்டமைப்பிடம் இருக்கின்றது.

இந்நிலையில் ஏனைய  மாகாண நிர்வாகங்கள் மத்திய  அரசு கொடுப்பதை எடுத்துக் கொண்டு திருப்திப்படும் சாத்தியப்பாடு அதிகமாகும். ஆனால், மத்தியில் எதிர்க்கட்சியாக இருக்கும் தமிழ்க் கூட்டமைப்பு வடக்கில் ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. இந்நிலையில் அரசியல் ரீதியான விருப்பு, வெறுப்புகள் மத்திய  அரசுக்கும் வட மாகாண நிர்வாகத்திற்குமிடையிலான அணுகு முறைகளில் அதிகளவு பிரதிபலிக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே. பரஸ்பரம் இரு தரப்பினரும் விமர்சனங்களையோ குற்றச்சாட்டுகளையோ வெளிப்படுத்துவது அடிப்படை  பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வைப் பெற்றுத்தராது. இந்நிலையில் தெற்கைப் போன்று வட பகுதியையும் முன்னேற்றமடையச் செய்வதற்கு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரிடமிருந்தும் இதய சுத்தியுடனான அணுகு முறையே அவசியம்.
- See more at: http://www.thinakkural.lk/article.php?editorial/qzwhozrzte1030e515df0d202309odb8v2ae52fcebb14295743063brvflp#sthash.rxVhZyzf.dpuf