பிரிட்டிஷ் பல்கலைக்கழக விரிவுரையாளரிடம் இலங்கை அதிகாரிகள் விசாரணை
'விரிவுரையாளர் இலங்கை இராணுவம் பற்றி சிலரை அழைத்து தகவல் கேட்டுள்ளார்': காவல்துறை


எல்எஸ்ஈ என்ற லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸ்- பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளரான டாக்டர் ராஜேஷ் வேணுகோபால் குடிவரவு குடியகல்வுதுறை அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோகண கூறினார்.
'இலங்கையில் நடக்கும் ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்வதற்கான வீசாவுடன் தான் அவர் இங்கு வந்திருக்கிறார். ஆனால் அவர் மட்டக்களப்பு பிரதேசத்துக்குச் சென்று, சிலரை ஓரிடத்துக்கு அழைத்து இராணுவத்தினர் தொடர்பான சில தகவல்களை கேட்டிருக்கின்றார். அங்கு இராணுவ கெடுபிடிகள் எப்படி இருக்கின்றன என்றெல்லாம் அவர் கேட்டிருக்கின்றார்..' என்றார் அஜித் ரோகண.
'அவர் வந்திருக்கின்ற வீசாவின்படி, அவருக்கு அதற்கான அனுமதி கிடையாது. குடிவரவு அதிகாரிகளின் விசாரணைக்குப் பின்னர் குறித்த கருத்தரங்கில் கலந்துகொள்ள அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்' என்றும் கூறினார் காவல்துறை பேச்சாளர்.
டாக்டர் வேணுகோபால் கடந்த ஞாயிறன்று இலங்கைக்கு அவர் வந்திருந்தபோது, கட்டுநாயக்க விமானநிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியையும் பொலிஸ் பேச்சாளர் மறுத்தார்.
தெற்காசிய அரசியல் விவகாரம், அபிவிருத்தி, மோதல் நிவர்த்தி உள்ளிட்ட விடயங்களே டாக்டர் ராஜேஷ் வேணுகோபால் தேர்ச்சி பெற்ற பாடப்பரப்புகள் என்று அவரது டுவிட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்ட பிரிட்டிஷ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ராஜேஷ் வேணுகோபால், வறுமை ஒழிப்பு ஆய்வு தொடர்பான சீபா (CEPA) என்ற இலங்கை நிறுவனத்தின் கொழும்பில் நடக்கும் வருடாந்த மாநாட்டில் மோதல் நிவர்த்தி தொடர்பில் திங்கட்கிழமை உரையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.