வீட்டிற்குள் நுழைந்த இராணுவ வீரர் பொதுமக்களிடம் வசமாக மாட்டினார்
Fri, 08/29/2014
குருநகரிலுள்ள வீடு ஒன்றுக்குள் நள்ளிரவு வேளையில் அத்துமீறி நுழைந்த இராணுவ வீரரை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ளதுடன் மரத்தில் கட்டி வைத்திருந்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச் சம்பவம் யாழ்.குருநகர் தொடர் மாடியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு குருநகர் புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் திருநாள் தேர்ப்பவனி இடம்பெற்றுள்ளது. இந்த தேர்ப்பவனியில் கலந்துகொள்வதற்காக அப்பகுதி மக்கள் ஆலயத்தில் ஒன்று கூடியுள்ளனர்.
இதன்போது நள்ளிரவு 11.45 மணியளவில் குருநகரில் அமைக்கப்பட்டுள்ள தொடர்மாடிக் கட்டடத்தில் உள்ள வீடு ஒன்றிற்குள் இராணுவ வீரர் ஒருவர் அத்துமீறி உள்நுழைந்துள்ளார். அப்பொழுது அவ்வீட்டில் பெண்ணொருவர் தனியாக இருந்துள்ளார். இராணுவ வீரரைக் கண்ட பெண் கூக்குரலிட்டதையடுத்து அவ்விடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் குறித்த இராணுவ வீரரை மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ளனர்.
இதேவேளை குறித்த இராணுவ வீரரை மரம் ஒன்றில் கட்டிவைத்து மறுநாள் காலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த இராணுவ வீரரை பொலிஸார் இராணுவப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியிலும் இது போன்ற சம்பவம் ஒன்றில் கடற்படை வீரர் ஒருவரை நள்ளிரவு வேளை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் கட்டிவைத்திருந்து பொலிஸாரிடம் ஒப்படைத்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியிருந்த மையும் குறிப்பிடத்தக்கது.