Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Sunday, August 3, 2014

[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 02:34.27 PM GMT ]
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிக்குள் இன்று அதிகாலை பிரவேசித்த வன்முறையாளர்கள் சிலர் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழி பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் இயங்கி வந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உட்பட மாணவர் சங்கங்கள் தடை செய்யப்பட்டு இன்றுடன் 507 நாட்கள் கடந்துள்ள நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாணவர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ள சூழ்நிலையில், நாட்டையும் நாட்டு மக்களை வேறு பக்கம் திசை திருப்பும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், முகமாலை பிரதேசத்தை சேர்ந்த சந்திரகுமார் சுதர்ஷன் என்ற மாணவரே சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் விடுதியின் கழிவறையில் இனவாத ரீதியான வாசகங்கள் சிலவற்றை எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து இந்த வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதுடன் அதில் மொழிப் பிழைகளும் காணப்படுகின்றன.
இது எங்கள் நாடு, நீங்கள் போய்விடுங்கள், நீங்கள் புலிகள் போன்ற வார்த்தைகள் அவற்றில் எழுதப்பட்டுள்ளன.
தாக்குதல் நடத்தியவர்கள் 30 முதல் 35 வயதுக்கு உட்பட்ட தோற்றத்தை கொண்டவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் உடலில் பச்சை குத்தியிருந்ததாகவும் அவர்களைத் தன்னால் அடையாளம் காட்ட முடியும் எனவும் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் கூறியுள்ளார்.
கடந்த 30 வருடகாலம் போர் நடைபெற்ற போதிலும் பல்கலைக்கழங்களில் இனவாத மோதல்கள் ஏற்படவில்லை. அதற்கு மாணவர்களும் இடமளிக்கவில்லை.
மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் இந்த தாக்குதலை வெளித்தரப்பு மேற்கொண்டுள்ளதாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் வெளியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தாலும் அதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பாதுகாப்பு அதிகாரிகளின் அனுமதியின்றி மாணவர்களின் விடுதிகளுக்கு வெளியார் செல்ல முடியாது என்பதே இதற்கு காரணம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Sri Lanka: One Island Two Nations