Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Tuesday, July 1, 2014

'இலங்கை அரசு மக்களைத் தடுத்தாலும் ஐநா விசாரணை நடக்கும்'


இலங்கை மீதான சர்வதேச விசாரணையை நடத்தவுள்ள அஸ்மா ஜெஹாங்கிர், மார்ட்டி அத்திசாரி,சில்வியா கார்ட்ரைட்
BBC 30 ஜூன், 2014 
இலங்கை மீதான சர்வதேச விசாரணையை நடத்தவுள்ள ஐநா விசாரணைக்குழுவுடன் தொடர்புகொள்ளும் மக்களை அரசாங்கம் தடுக்க முயன்றாலும் தமது விசாரணைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்று அந்த விசாரணைக் குழுவின் வல்லுநர்களில் ஒருவரான அஸ்மா ஜெஹாங்கிர் தெரிவித்துள்ளார்.
மக்களை எதேச்சாதிகாரமாக தடுக்க முயல்வது அரசாங்கத்துக்கே பாதகமாக அமையும் என்றும் அஸ்மா ஜெஹாங்கிர் பிபிசிக்கு அளித்துள்ள பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார்.
ஐநா விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கமுடியாது என்று தீர்மானம் எடுத்துள்ள இலங்கை அரசாங்கம், அந்த விசாரணைக் குழுவுடன் தொடர்புகொள்பவர்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த சூழ்நிலையில், இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தவுள்ள விசாரணைக் குழுவை ஐநா மனித உரிமைகள் பேரவை கடந்த வாரம் அறிவித்தது.
ஃபின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்ட்டி அத்திசாரி, நியூசிலாந்தின் முன்னாள் கவர்னர் ஜெனரல் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கிர் ஆகிய மூன்று துறைசார் வல்லுநர்கள் இந்த விசாரணையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

'மக்களைத் தொடர்புகொள்ள வழிகள் உண்டு'


பாலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பில் ஐநா விசாரணை அறிக்கையை அஸ்மா ஜெஹாங்கிர் கடந்த ஆண்டு வெளியிட்டார்

'எந்தவொரு அரசாங்கமும் விசாரணையாளர்களுடன் தொடர்புகொள்வதை தடுப்பது என்பது மிகவும் சிரமமான விடயமாகத் தான் இருக்கும். அரசாங்கம் எதேச்சாதிகாரத்தை பிரயோகித்து மக்களைத் தடுக்க நினைத்தால், அரசாங்கத்துக்குத் தான் அது பாதகமாக வந்துமுடியும்' என்றார் அஸ்மா ஜெஹாங்கிர்.
எல்லா தரப்பினரும் புரிந்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமது விசாரணைக் குழு பக்கச்சார்பற்ற முறையிலும் சுயாதீனமாகவும் விசாரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் தடுத்தாலும் மக்கள் தம்மோடு தொடர்புகொள்வதற்கான வழிமுறைகளைக் கண்டுகொள்வார்கள் என்றும் பாகிஸ்தானிய வழக்கறிஞர் அஸ்மா ஜெஹாங்கிர் கூறினார்.
அரசாங்கங்கள் ஒத்துழைப்பு வழங்காதிருந்த பல சர்வதேச விசாரணைகளை இதற்கு முன்னர் தாம் நடத்தியிருப்பதாகவும் விசாரணைக்குழு வல்லுநர் ஜெஹாங்கிர் தெரவித்தார்.
தமக்கு ரகசியமாக தகவல்களை அளிப்போரின் ரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
தமது விசாரணைகள் வரும் ஆகஸ்ட் முதல்-இரண்டு வாரங்களில் தொடங்கும் வாய்ப்புள்ளதாகவும் அஸ்மா ஜெஹாங்கிர் கூறினார்.
தமது பரிந்துரைகள் அடங்கிய விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், ஐநா மனித உரிமைகள் பேரவையே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கும் என்றும் வழக்கறிஞர் ஜெஹாங்கிர் பிபிசியிடம் தெரிவித்தார்.