வடக்கிற்கு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதில் தவறில்லை – டியூ.குணசேகர
02 ஜூன் 2014
வடக்கிற்கு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதில் தவறில்லை என அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். எனினும், ஏனைய மாகாணங்களுக்கு இவ்வாறு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதில் ஆபத்து காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஏனெனில் சில அரசியல்வாதிகளின் நடத்தை குறித்து திருப்தி அடைய முடியாது எனவும் இதனால் காவல்துறை அதிகாரங்களை சகல மாகாணங்களுக்கும் வழங்க முடியாது எனவும்; அவர் தெரிவித்துள்ளார்.13ம் திருத்தச் சட்டம் காவல்துறை அதிகாரங்களுடன் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய காவல்துறை ஆணைக்குழு, காணி ஆணைக்குழு ஆகியவற்றின் நிர்வாகத்தின் கீழ் அதிகாரங்களை வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்களுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதில் பிழை எதனையும் காணவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார், ஏனைய மாகாணங்களில் புதிய அரசியல் கலாச்சாரம் உருவாகும் வரையில் காவல்துறை அதிகாரங்களை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

