யாழ்ப்பாணம் இராணுவத்தின் இரும்பு பிடிக்குள் - தமிழரசுக் கட்சி– TNPF கட்சிகளின் அலுவலகங்கள் முற்றுகை:
18 மே 2014
கீரிமலை இராணுவ முற்றுகைக்குள் - மகிந்த கோத்தாபய இராணுவ சர்வாதிகாரம் மீண்டும் ஒருமுறை மக்களை பழிவாங்குகிறது:-
கீரிமலை இராணுவ முற்றுகைக்குள் - மகிந்த கோத்தாபய இராணுவ சர்வாதிகாரம் மீண்டும் ஒருமுறை மக்களை பழிவாங்குகிறது:-யாழ்.குடாநாட்டின் கட்டுப்பாடு மீண்டும் இன்று படைதரப்பின் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காணுமிடமெங்கும் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் மூலம் உண்மையில் யாழ்ப்பாணத்தினிலுள்ள படையினரது எண்ணிக்கை அப்பட்டமாக தெரிவதை காணக் கூடியதாகவுள்ளதாக வடக்கின் குளோபல் தமிழ்ச் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
நல்லூர் முதல் குடாநாட்டிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆலய மணிகளை ஒலிக்க முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஆராதனைகளிற்கும் ஒன்று கூடுகின்ற பக்தர்களது எண்ணிக்கைக்கும் கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நல்லூரில் வழிபட சென்ற பக்தர்களைவிட பல மடங்கு படையினர் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடன் நிறைவேற்றுவதற்காக கீரிமலையில் இன்று விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்தப் பகுதி முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்காக ஆலய வழிபாடுகள் நடத்த தடையில்லை என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் அவை கூட பெயரளவிலான அறிவிப்பாகவுள்ள நிலையில், தமிழ் மக்கள் ஆலய வழிபாடு நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கீரிமலைக்குச் செல்லும் பிரதான வீதி மார்க்கங்கள் அனைத்திலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீதிகள் மூடப்பட்டுள்ளன. அந்தப் பிரதான வீதிகளினூடாகவோ குறுக்கு வீதிகளினூடாகவோ யாரும் கீரிமலைக்குச் செல்ல முடியாதவாறு இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். இந்துகளது பிதிர் கடன் நிறைவேற்றும் கீரிமலை மடத்தினில் இன்று முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களிற்கான விசேட யாகங்கள் மற்றும் ஆராதனைகள் ஏற்பாடாகியிருந்தது.
இதனிடையே தமிழரசுக்கட்சியின் மார்டின் வீதி தலைமையகம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 3ம் குறுக்கு தெருவிலுள்ள தலைமையகம் என்பவையும் முற்றுகைக்குள்ளாகியுள்ளன. இவ்வலுவலகங்களிற்கு செல்லும் பிரதான வீதிகிளினில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வீதியினால் வருவோர் போவோர் அனைவரும் துருவி துருவி விசாரணைகளிற்பு உள்ளாக்கப்பட்டு உள்ளதுடன் அடையாள அட்டைகள் மற்றும் வாகன இலக்கங்கள் பதிவுக்குள்ளாகியுள்ளது.
இதனைவிட யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் பிரதான நகரங்கள் வீதிகள் சோதனை வளையத்தினுள் உள்ளன. வீதிகளில் வாகனங்களில் பயணிப்பவர்கள் பரவலாக இறக்கி சோதனைகளிற்கு உள்ளாக்கப்படடு வருகின்றனர். இன்று மாலை நினைவேந்தல் நிகழ்கள் பற்றி அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையில் நிலவரம் மேலும் நெருக்கடிகளிற்கு உள்ளாகலாமென அஞ்சப்படுகின்றது.