சர்வதேச மத்தியஸ்ததுடன் த.தே.கூ.வுடன் பேசும்போதே உண்மையான சமாதானம் ஏற்படும்: அரியநேத்திரன்
Tue, 04/15/2014
இந்த நாட்டில் நிரந்தரமான ஒரு சமாதானம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசாங்கம் பேச வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அம்பிளாந்துறையில் இடம்பெற்ற ஊஞ்சல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய அவர்,
தமிழ்-சிங்கள புத்தாண்டு நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. தொடர்ச்சியாக வருடந்தோறும் நாங்கள் மருத்துநீர் தேய்க்கின்றோம். ஆலயங்களுக்கு செல்கின்றோம். புத்தாடை அணிகின்றோம்.
ஆனால் நிரந்தரமான ஒரு சமாதானம் ஏற்பட வேண்டுமாக இருந்தால், ஜனாதிபதி இன்றைய 2014 தமிழ் சிங்கள புத்தாண்டிலே கூறிய நிரந்தர சாந்தியும் சமாதானமும் திகழவேண்டுமாக இருந்தால், நான் ஜனாதிபதியிடம் ஒரு செய்தியை இன்றைய நாளில் கூறுகின்றேன்,அதை ஒரு வேண்டுகோளாகவும் விடுக்கின்றேன் இந்த இலங்கைத்திருநாட்டிலே தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் நிச்சயமாக சர்வதேச மத்தியஸ்தத்துடன் அரசாங்கம் பேசுவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கவேண்டும்.
நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசாங்கம் பேசினால் மாத்திரமே ஜனாதிபதி கூறுகின்ற சாந்தி சமாதானமாக இருக்கலாம்,அல்லது வேறுயாரும் கூறுகின்ற சாந்தி சமாதானம் இந்த நாட்டிற்கு வரும் என்கின்ற செய்தியை கூறிவைக்க விரும்புகின்றேன்.
ஏனென்றால் தொடர்ச்சியாக இன்னல்பட்டு அடிமைப்பட்டுக்கொண்டிருக்கின்ற இனம் நாங்கள். எங்களுக்கு விமோசனம் தேவை. தற்போதைய சந்ததியில் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை தமிழர் மரபில் இருந்து அழியாமல் பாதுகாக்க சித்திரைப்புதுவருடமும் வழிவகுக்கின்றது.
இதில் ஒரு அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பிரதேசத்தின் அம்பிளாந்துறையில் உhஞ்சல் விழா இடம்பெற்றது. செவியேறல் ரீதியான ஊஞ்சல் பாட்டு பாடப்பட்டு ஊஞ்சல் ஆடப்பட்டது.
301 வருடம் பழைமை வாய்ந்த நிழல்வாகை மரத்தில் ஊஞ்சல்கட்டி சிறுவர், பெரியோர் என்ற வேற்றுமை இன்றி கிராம மக்கள் ஊஞ்சல் ஆடினர்.
அன்று அம்பிளாந்துறையை ஆட்சிசெய்த சிற்றரசன் அருமைக்குட்டிப்போடியார் இன் 1776ஆம் ஆண்டுகாலப்பகுதியில் இருந்து ஊஞ்சல் கட்டி ஆடிய நிழல் வாகை மரமான இம்மரம் இருந்ததாக வரலாறு கூறுகின்றது.