Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Tuesday, April 29, 2014

அரசாங்க பணிகளுக்கான ஆளெடுப்பை இராணுவம் செய்வதற்கு எதிராக கண்டனம்அரசாங்க பணிகளுக்கான ஆளெடுப்பை இராணுவம் செய்வதற்கு எதிராக கண்டனம்

இளைஞர்களிடம் நேர்காணல் நடத்தும் இராணுவ அதிகாரி

இளைஞர்களிடம் நேர்காணல் நடத்தும் இராணுவ அதிகாரி
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 ஏப்ரல், 2014 
BBCஇலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் இளைஞர் யுவதிகளை அரச சேவையில் சேர்த்துக்கொள்வதற்காக இராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை வடமாகாண சபை அமைச்சர் கண்டித்துள்ளார்.
இது அரச நடைமுறைக்கு முரணானது என்றும் தமிழ் இளைஞர் யுவதிகளைத் தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதற்காக இராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்றும் வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
அரச சேவைக்கு ஆட்சேர்த்தல் என்ற மகுடத்தில் வெளியிடப்பட்டுள்ள துண்டு பிரசுரம் ஒன்றில், உரிய அதிகாரிகளினால் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதற்கு அமைவாக யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் இராணுவத்தினரால் ஞாயிறன்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
மருத்துவதாதி, நடனம், ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள், பாடகர்கள், வாத்தியம் மற்றும் நடன கலைஞர்கள், கணினி இயக்குநர்கள், விவசாய மேற்பார்வையாளர், விவசாயிகள், தொழிலாளர்கள், மின் இணைப்பாளர், தச்சு வேலை, மேசன், வர்ணம் பூசுபவர்கள், ஒட்டுவேலை, வாகனம் திருத்துவோர், சாரதிகள், கட்டட கலைஞர், பட வரைஞர், கட்டடத் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் என 21 வகையான பணிகளுக்குரிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அந்தத் துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரம் எட்டு முதல் பட்டப்படிப்பு வரை படித்துள்ள 18 முதல் 30 வரையிலான வயதுடைய பெண்களும், 18 க்கும் 32 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆண்களும் இந்த வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்கலாம் என்று அந்தத் துண்டு பிரசுரத்தில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அனைத்துப் படிகளையும் உள்ளடக்கியதாக 25 ஆயிரம் முதல், 30 ஆயிரம் வரையில் மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் அந்தத் துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஞாயிறன்று நடைபெற்ற விண்ணப்பப் பதிவு நடவடிக்கையின்போது நூற்றுக் கணக்கான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டார்கள்.
திங்களன்று யாழ்ப்பணம் துரையப்பா விளையாட்டரங்கில் இவர்களுக்கு நேர்முகப் பரீட்சை நடைபெறும் என தெரிவிக்கும் கடிதங்களும் இவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைக்கும் மத்திய அரசுக்கும் அவற்றின் கீழ் இயங்கும் திணைக்களங்களுக்குமே அரச சேவைக்கு ஆட்சேர்க்கும் உரிமையும் அதிகாரமும் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன், இராணுவத்தின் இந்த நடவடிக்கையை அத்துமீறிய நடவடிக்கை என்று கண்டித்திருக்கின்றார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் இளைஞர் யுவதிகளின் சுதந்திரமான சிந்தனையை மட்டுப்படுத்தி அவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான நடவடிக்கையையே இராணுவம் மேற்கொண்டிருக்கின்றது என்றும் அவர் குற்றம் சுமத்தியிருக்கின்றார்.
இந்த நடவடிக்கை குறித்து இராணுவத்தின் கருத்தை அறிவதற்காக இராணுவ பேச்சாளரைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.