கட்டாய ஆட்சேர்ப்பு பெண்களுக்கு பயிற்சி (வீடியோ)


19 March 2014
இராணுவத்திற்கு கட்டாயத்தின்பேரில் சேர்க்கப்படும் பெண்களின் எதிர்காலம் தொடர்பாக மிகவும் அச்சுறுத்தலான நிலைமை தோன்றியுள்ளது. இராணுவத்தில் சேர்க்கப்படும் பெண்கள் முன்னரும் பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்டு அது வைத்தியசாலைவரை சென்று பின்னா் அது அவர்களுக்கு பேய்பிடித்தாக சித்தரிக்கப்பட்டு செய்திகள் மூடி மறைக்கப்பட்டன.
அப்போது அந்த செய்தியை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சம்மந்தப்பட்ட வைத்தியர் பலகாலம் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் அவர் வேலையை இழக்க வேண்டியேற்பட்டது. அதுபோலவே கடந்த வாரத்தில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உடல்நலக்குறைவு காரணமாக இரண்டு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் இருவரையும் பரிசோதனைசெய்த வைத்தியர்கள் அவர்கள் கருவுற்றிருந்தமை அறிந்தனர், திருமணமாகாத இப்பெண்களின் நிலையினை வைத்திய பொறுப்பதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டவேளை குறித்த இராணுவத்தைச் சேர்ந்த தமிழ் யுவதிகள் இருவரும் தாம் முகாமில் பாலியல் சித்திரவதைக்கு உள்ளானதாகவும் தமது கருக்களை கலைத்துவிடும்படியும் கோரியுள்ளனர். இதற்கு வைத்தியர்கள் மறுப்புத்தெரிவித்ததோடு பெற்றோருக்கும் அறிவிக்க முற்பட்டுள்ளனர்.
ஆயினும் வன்னி படைத் தலமையகத்திலிருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பின் அறிவுறுத்தலுக்கு அமைய அவா்கள் கரு கலைக்கப்பட்டதுடன் நீண்டகால கருத்தடை சாதனங்களும் அவர்களுக்கு பொருத்தப்பட்டதாக அறியவருகின்றது. இராணுவத்திற்கு சேர்க்கப்பட்ட தமிழ் யுவதிகள் தொடர்பாக குரல்கொடுத்த வைத்தியர் ஒருவா் கைதாகி வேலையையும் இழந்து வீட்டில் இருப்பதால் அந்தநிலை தமக்கு நேரக்கூடாது என்பதற்காக வைத்திசாலை வட்டாரங்கள் செய்தியை அடக்கி வாசிக்கின்றார்கள்.
இதுகுறித்து வடமாகாணசபை சுகாதார அமைச்சு அதிக கவனம் செலுத்தி இவ்வாறான மனித உரிமை மீறல் மற்றும் தமிழினம் சார்ந்த உரிமை மீறல்களை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும் என்பதே அனைவரினதும் வேண்டுகையாகும்.
இதே வேளை இராணுவத்தில் இணைக்கப்படும் பெண்களுக்கு வழங்கப்படும் சித்திரவதைகளை கொண்ட உறுதிப்படுத்தப்படாத காணொளி ஒன்று வெளிவந்துள்ளது. அதில் சில பெண்களுக்கு பயிற்சி என்ற போர்வையில் வழங்கப்படும் சித்திரவதைகளும், அதன்போது இராணுவத்தினரின் சிங்களத்திலான கேலியும்,கிண்டலும் எல்லோரையும் அதிர வைக்கிறது.