Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Saturday, March 1, 2014

வட இலங்கையில் ஒரே இடத்தில் 9 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு

BBC
28 பிப்ரவரி, 2014
இலங்கையின் வடக்கே வீடொன்றில் தோண்டியபோது ஒரே இடத்தில் 9 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு, மூங்கிலாறு 200 வீட்டுத் திட்டத்தில் வீட்டு வளவை சமப்படுத்துவதற்காக உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி உழுதபோது இரண்டு மனித எலும்புக்கூடுகள் பாய் ஒன்றில் சுற்றிய நிலையில் வியாழன் மாலை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து வெள்ளியன்று பிற்பகல் நீதவான் முன்னிலையில் அந்த இடத்தைத் தோண்டியபோது 9 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூங்கிலாறு வடக்கு 200 வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த பத்மநாதன் வனிதா என்பவருடைய வீட்டு வளவிலேயே இந்த எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிசார் பாதுகாப்பைப் பலப்படுத்தி முல்லைத்தீவு நீதிமன்றத்திற்குத் தகவல் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் பரஞ்சோதி, யாழ் மாவட்ட பதில் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சின்னையா சிவரூபன், முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோர் முன்னிலையில் இந்த இடம் வெள்ளிக்கிழமை பிற்பகல் தோண்டப்பட்டு 9 எலும்புக்கூடுகளும், சிதைந்த நிலையிலான தேசிய அடையாள அட்டையொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.