மூங்கிலாறு பகுதியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் பூநகரியைச் சேர்ந்த 3 குடும்பங்களுடையவை உறவினர்கள் இனம் காட்டினர்
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=800192756220696588#sthash.bC5gKSYI.dpuf


19 மார்ச் 2014, புதன்
முல்லைத்தீவு, மூங்கிலாறுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 28 ஆம்திகதி மீட்கப்பட்ட 9 எலும்புக்கூடுகளும் பூநகரியைச் சேர்ந்த 3 குடும்பங்களின் உறுப்பினர்களது என அடையாளம் காணப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு, மூங்கிலாறுப் பகுதியில் கடந்த 27 ஆம் திகதி காணியை உழுதபோது அங்கு பிளாஸ்ரிக் பாய்களினால் சுற்றப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகள் இருந்தமை அவதானிக்கப்பட்டது. சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து மறுநாள் அங்கு 9 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
அதன்போது ஒருவரது அடையாளஅட்டையும் மீட்கப்பட்டிருந்தது. இவ்வாறான தகவல்களைக் கொண்டு இடம்பெற்ற விசாரணைகளில் கடந்த 2009 ஆம் ஆண்டு விசுவமடுகுளத்தை அண்மித்த பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களே அங்கு புதைக்கப்பட்டதாக தெரியவந்தது.
இது குறித்து அப்போது தமிழர் புனர்வாழ்வு பணியாளராக இருந்த ஒருவரும் சாட்சியமளித்திருந்தார். மீட்கப்பட்ட அடையாள அட்டைக்குரிய நபர் கோரக்கன் கட்டு, பரந்தனைச் சேர்ந்த திருச்செல்வம் ரமேஸ்வரன் என்பவர் ஆவார்.
இவருடன் இவரது மனைவியான ரமேஸ்வரன் கெளசல்யா, இவர்களது உறவினர்களான செல்வாபுரம் பூநகரியைச் சேர்ந்த கந்தசாமி பவளராணி மற்றும் இவரது பிள்ளைகளான கந்தசாமி கஸ்தூரி, கந்தசாமி ரஜிவ்காந்த் ஆகியோரும் இதே பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு குடும்பமான துரையப்பா பூரணலிங்கம், அவரது மனைவியான பூரணலிங்கம் புஸ்பவதி, இவர்களது மகள்களான பூரணலிங்கம் கலாவதனி, பூரணலிங்கம் மேனகா, மகனான பூரணலிங்கம் கஜீபன் ஆகியோரே ஒரே நாளில் உயிரிழந்ததாக தெரியவருகிறது.
இவர்களில் ஒருவரது எச்சங்கள் அந்தப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருக்கலாம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்துயல் தாக்குதலில் காயமடைந்து உயிர் தப்பியவர்கள் வழங்கிய தகவல்களின்படி 2008 ஆம் ஆண்டில் தாம் பூநகரியில் இருந்து இடம் பெயர்ந்து புளியம்பொக்கணையிலும் அங்கிருந்து இடம்பெயர்ந்து கண்ணகை நகரிலும் வசித்ததாகவும், 2009.01.31 ஆம் திகதி இரவு 7 மணியளவில் இடம்பெற்ற எறிகணை வீச்சில் தாம் இருந்த குடிசைகள் சேதமடைந்தன என்றும் அதன் போதே இவர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர். தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.