காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: உண்ணாவிரதம் வாபஸ்
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் எனக் கோரி நான்கு நாட்களாக நடைபெற்ற காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று வியாழக்கிழமை மாலை அரசாங்கம் அளித்த உறுதிமொழியொன்றையடுத்து கைவிடப்பட்டிருக்கின்றது.
உண்ணாவிரதம் இருந்தவர்களை நேரடியாக வந்து சந்தித்துப் பேச்சுக்கள் நடத்திய பிரதி பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன எழுத்து மூலமாக அளித்த உறுதிமொழிக்கமைவாகவே தாங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக உண்ணாவிரதம் இருந்து வந்த காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டறியும் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் சங்கம் மாசி மாதம் 9 ஆம் தேதி சட்டம், ஒழுங்கு அமைச்சர், சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் மா அதிபர், நீதி அமைச்சர் இவர்களுடன் 16 பேர் கொண்ட குழுவும் அருட்தந்தையர்களும் சந்திப்பார்கள். இக்கூட்டம் அன்று காலை 11 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறும் என்று எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் பாதுகாப்பு ராஜாங்க ஆமைச்சர் ருவான் விஜேவர்தன கையெழுத்திட்டுள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 9 ஆம்தேதி நடைபெறுகின்ற சந்திப்பின்போது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் ரஞ்சன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப அவர் அளித்த உறுதிமொழியை ஏற்று இந்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.