Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Thursday, March 8, 2018

“அரசாங்கம் தீர்வைத் தராதென  ஜனாதிபதி தெரிவித்துள்ளதால் சர்வதேச விசாரணையே எமக்கான தீர்வு”

Published by Priyatharshan on 2018-03-08 14:33:05

அரசாங்கம் தமக்கு எந்த தீர்வையும் தராது என்பதை 3 தடவைகள் தம்மை சந்தித்த நாட்டின் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ள நிலையில்  சர்வதேச விசாரணையே தமக்கான தீர்வாக அமையும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான விடைதேடி கடந்த வருடம் பங்குனி மாதம் 08 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (08-03-2018) உடன் ஒருவருட பூர்த்தியை எட்டியுள்ளது.
கடந்த காலத்தில் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டும் யுத்த காலப்பகுதியில் யுத்தப்பிரதேசங்களில் விசேடமாக யுத்தம் முடிவடைந்து, இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒருவருட நிறைவான இன்றையதினம் சர்வதேச மகளிர் தினத்தை புறக்கணிக்கும் விதமாக கறுப்புத் துணிகளால் வாய்களை கட்டி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்தனர்.
இந்த நிலையில் தமது பிள்ளைகள் எங்கே அவர்களுக்கு என்ன நடந்தது என்ற முடிவு கிடைக்கும் வரை போராட்டம் தொடருமென மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அரசாங்கம் தமக்கு எந்த தீர்வையும் தராது என்பதை 3 தடவையாக தம்மை சந்தித்த நாட்டின் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ள நிலையில்  சர்வதேச விசாரணையே தமக்கான தீர்வாக அமையும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று தமது போராட்டம் ஒருவருடத்தை எட்டியுள்ள நிலையில் தமக்கான தீர்வினை சர்வதேசமே தர வேண்டும் என காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் கோருவதுடன், நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் தமக்கான ஒரு உறுதியான தீர்வு பெற்றுத்தரப்படவேண்டும் எனவும் ஜெனீவாவுக்கான மகஜர் ஒன்றும் இதன்போது அனுப்பி வைக்கப்படுகிறது எனவும் தெரிவித்தனர்.
குறிப்பாக நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள  இந்த நிலையில் மிகவும் அமைதியான முறையில் பதாதைகளை தாங்கியவாறு, மகளிர் தினமான இன்று வீதியில் கறுப்பு துணிகளை தலைகளில் கட்டியும் வாய்களை கட்டியும் அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.
இன்றைய இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மதகுருமார் சிவில் சமூக பிரதிநிதிகள் பொது அமைப்புக்கள் வட கிழக்கின் 8 மாவட்டங்களில் இருந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்  கலந்துகொண்டு மக்களுக்கான தீர்வை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆகபட்ட்வர்களின் உறவினர்கள் பகிரங்க அழைப்பு விடுத்தும் இதுவரை அரசியல் பிரமுகர்கள் எவரும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.