போர்க்கொடி தூக்குவோர் சாதிக்கப் போவது என்ன?
காரை துர்க்கா இலங்கையில் தமிழ் இனம், தனது இன விடுதலைக்காக சுமார் எழுபது வருடங்களாக ஒப்பற்ற தியாகங்களைச் செய்து போராடி வருகின்றது.
இதற்காகப் பல அரசியல் கட்சிகள், விடுதலை அமைப்புக்கள் தோற்றம் பெற்றன. விடுதலைப் புலிகளின் நேரடியான பங்குபற்றல் மற்றும் ஒப்புதலுடன் 2001 ஒக்டோபர் 20 ஆம் திகதி பிரசவித்ததே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகும்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (இ.த.அ.க), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( EPRLF) தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO)அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (ACTC)என நான்கு கட்சிகள் ஒன்றிணைந்து தோற்றம் பெற்றதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
அந்த வகையில், 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 15 ஆசனங்களையும் 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 22 ஆசனங்களையும் 2010 ஆம் ஆண்டில் 14 இடங்களையும் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் 16 இடங்களையும் கைப்பற்றியது. அமோக வெற்றி வாகை சூடியது.
2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் விலகிக் கொண்டது.
தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் (PLOTE) இணைந்து கொண்டது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (த.தே. கூ) பல சவால்களுக்கு முகம் கொடுத்து நிற்கின்றது. த .தே. கூ உடையப் போகின்றதா? த. தே கூட்டமைப்புக்குள் பிளவு என்றெல்லாம் நாளாந்தம் பத்திரிகைச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
த. தே. கூ உருவாக்கம் பெற்ற நாள் முதலே அரசியல் கட்சியாக அதன் பதிவு, சின்னம் எனப் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அவைகள் தீர்க்கப்படாமலே கிடப்பில் போடப்பட்டு விட்டன.
தேர்தல் வேளையில் கட்சி ரீதியான ஆசன பங்கீட்டிலும் தமிழரசுக் கட்சி செல்வாக்கு செலுத்துகின்றது; தனது கட்சி அங்கத்தவர்களை அதிகப் படியாக நியமிக்கின்றது என்ற கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் வருவதுண்டு.
உண்மையில், நான்கு கட்சிகள் ஒரு குடையின் கீழ் வந்து ஒன்றினைந்தாலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆதிக்கமே கூட்டமைப்பு உருவாக்கிய அன்று தொட்டு இன்று வரை, நிலவுவதால் பிரச்சினைகளும் பிடுங்குப்பாடுகளும் பஞ்சமில்லாமல் நிலவுகின்றன.
த.தே.கூ என்பது வெறுமனே ஓர் அரசியல் செய்யும் கட்சி அல்ல; மாறாக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களால், தமிழ் தேசியத்தால் ஆணை வழங்கப்பட்ட அமைப்பு. ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்னர், தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழுவதற்கான தமது உரிமைகளைப் பெற்றுத் தரும் பொறுப்பு தமிழ் மக்களால் தமிழ்க் கூட்டமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே, இத்தகைய பெரும் பொறுப்பு வாய்ந்த அமைப்பிடம் ‘நீ பெரிதா, நான் பெரிதா’ என்ற பொறாமைக்குணம் சற்றேனும் எழக் கூடாது. தற்போதைய நிலையில் தமிழ் மக்களுக்கு நிலையான நிம்மதி, நிலையான தீர்வு வேண்டும்.

