தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை அரசு மீதான அழுத்தம் தொடரும்
தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் வரை அரசாங்கத்தின் மீதான அழுத்தங்கள் தொடரும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பெருமளவு மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர்: தென்னிலங்கை சம்பவங்கள் சந்தேகங்களைக் கிளப்பினாலும், பிரதமர் மற்றும் ஜனாதிபதியில் நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் நேற்று தொழில் சட்டக்கல்லூரியை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில், அரசியல் தீர்வு மூலமே எமது மக்கள் தமது பகுதிகளைத் தாமே நிர்வகிக்கும் நிலை உருவாக முடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனும் அதற்கென முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் மற்றும் காணாமற் போனார் தொடர்பான பிரச்சினைகள், காணி விடுவிப்பு போன்ற விடயங்களில் தமிழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
தமிழ் மக்கள் பெரும் நம்பிக்கையுடனேயே ஜனாதிபதி தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். அந்த நம்பிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிவமோகன்
(பாராளுமன்ற உறுப்பினர்)
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் செயற் திட்டங்கள் மகிழ்ச்சியளிக்கின்றன.
கேப்பாப்புலவு பகுதியில் ஒரு தொகுதி (243 ஏக்கர்) தற்போது விடுவிக்கப்பட்டபோதும் மேலும் பெருமளவு காணிகள் வடக்கின் பல பகுதிகளிலும் விடுவிக்கப்படாமலேயே உள்ளன. விரைவில் அவற்றை மக்களிடம் கையளிப்பதற்கு ஜனாதிபதி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று விடுவிக்கப்படாத அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமற் போனோர் தொடர்பில் அரசாங்கத்தின் அசமந்தப் போக்கு தொடர்பில் வவுனியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறுகிறது. அரசாங்கம் இந்த விடயங்களில் முக்கிய கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.
பிரபா கணேசன்:
(ஜனாதிபதியின் வன்னி மாவட்ட விசேட செயற் திட்டங்களுக்கான பணிப்பாளர்)
யுத்தத்தினால் பாரிய அளவில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவைக் குறிப்பிட முடியும். இங்கு மக்கள் முழுமையாக இன்னும் சகஜ நிலைக்குத் திரும்பவில்லை என்பது புலப்படுகிறது.
தமிழ் மக்களின் ஆதரவினாலேயே தாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடிந்தது என்றும் தமிழ் மக்களின் தேவைகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதில் தாம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி என்னிடம் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த நோக்கம் நிறைவேற என்னாலான அனைத்து ஒத்துழைப்புகளையும் நான் வழங்குவேன்.
வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டும் சிறந்த சந்தர்ப்பம் தற்போது உருவாகியுள்ளது. காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனோர் தொடர்பிலான பிரச்சினைக்குத் தீர்வு உட்பட அனைத்து விடயங்களுக்கும் சிறந்த பதில் கிட்டும் என்ற நம்பிக்கை உண்டு. (ஸ)
முல்லைத்தீவிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம்