உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களை வெளியேற்ற பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வி
வவுனியாவில் காணாமற்போன உறவுகள் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை கலைக்க முயன்ற பொலிஸாரின் நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா தபால் நிலையத்திற்கு அருகில் இன்று காலை உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் காணாமற்போன உறவுகளை அவ்விடத்திற்கு வந்த வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நடைபாதையில் அமர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.“இந்நிலையில், அவ்விடத்தில் உண்ணாவிரதம் இருப்பவர்களால் போடப்பட்ட கொட்டகையையும் அகற்றுமாறும் அல்லது நகரசபை செயலாளரிடத்தில் அனுமதி பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் பொலிசாருடன் கலந்துரையாடியும் பொலிசார் அனுமதியளிக்கவில்லை. பின்னர் நகரசபை செயலாளரை சம்பவ இடத்திற்கு அழைத்து பொலிசாருடன் கலந்துரையாடப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர், உண்ணாவிரதம் மேற்கொண்டு வருபவர்களினால் இடையூறு ஏற்பட்டால் தான் பொறுப்பேற்பதாகவும் பொலிசாருக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது. நகரசபை செயலாளர் அனுமதியளித்துள்ளபோதும் பொலிசாரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. எனினும் கொட்டகை அமைக்கும் பணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.