Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Thursday, August 11, 2016

மஹிந்தவின் மகன் என்று கூறியவரை எவ்வாறு நம்புவது?: சபையில் த.தே.கூ.

Published by MD.Lucias on 2016-08
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் மகிந்தவின் மகன் என தன்னை கூறிக்கொண்டிருந்தவரும், நீதிமன்றத்தை அச்சுறுத்தியவருமான அமைச்சர்   ரிசாத் பதியூதீன்  அங்கம் வகிக்கும்  வடமாகாணத்திற்கான மீள்குடியேற்றச்  செயலணியின் மீது எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கேள்வியெழுப்பி உள்ளது. 
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ்  நிர்மலநாதன்  வடமாகாண மீள்குடியேற்றச்  செயலணியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,  வடமாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படாமைக்கான காரணம்  என்ன என கேள்வியெழுப்பினர். 
தொடர்ந்து வடமாகாண மக்கள் வடமாகாண சபையும், தம்மால் அதிகளவு  வாக்குகள் அளித்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளையுமே அதிகம் நம்பியிருக்கின்றார்கள். அவ்வாறிருக்கையில்  அந்த மக்களின் சார்பில் ஒருவரையேனும்   அந்த செயலணியில் உள்வாங்காமல்   இருப்பதானது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.  இதில்  வெவ்வேறு உள்நோக்கம்  காணப்படுகின்றன என்ற ஐயப்பாடும் மக்கள் மத்தியில்  எமக்கு எழுகின்றது. 
மேலும்  முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் தன்னை மஹிந்தவின் மகன் என கூறியவரும்  நீதிமன்றத்திற்கு கல்லெறிந்து அச்சுறுத்தல் விடுத்தவரும் தற்போது நிதிமோசடி தொடர்பான குற்றப்புலனாய்வு பிரிவில் வழக்கு  காணப்படும் அமைச்சருமான   ரிஷாட் பதியுதீன் இந்த செயலணியில் காணப்படுகின்றார். அவ்வாறான ஒருவர் அங்கம் வகிக்கும் செயலணி எவ்வாறு பக்கச்சார்பின்றி செயற்படும் என நம்பிக்கை கொள்ள  முடியும். ஆகவே வடமாகாணத்திற்கான மீள்குடியேற்ற செயலணியில் வடமாகாண முதலமைச்சரையும் உள்வாங்க வேண்டும் என வலியுறுத்தினார்.