Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Friday, August 19, 2016

வன்னியில் வலை விரிக்கும் நிதி நிறுவனங்கள்!

முகப்பு

ஆக 12 2016 01:44
கடந்த காலப் போர், பொருளாதார நெருக்கடிகள், அதன் பின்னரான இடப்பெயர்வுகள், இழப்புகள் என்பவற்றால் போரிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மீள்குடியேறியுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வாழ்விட வசதிகளை ஏற்படுத்த வேண்டியமை, வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியமை என பல்வேறு சவால்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றை ஏற்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு இடங்களிலும் கடன்களைப் பெற்று அவற்றை மீளச்செலுத்த முடியாமல் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வங்கிகளிலும் தனியார் கம்பனிகளிலும் நுண்கடன் நிதிநிறுவனங்களிடமிருந்தும் பல்வேறு வட்டி வீதங்களில் தொழில் தேவைகள் கருதி பெற்றுக் கொள்ளும் கடன்கள் அந்த நோக்கத்திற்காக செலவிடப்படாமல் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலையில் அவற்றை மீளச் செலுத்த முடியாமல் பல குடும்பங்கள் உள்ளன. இதனை விடவும் தேவை கருதி வங்கிகளில் கடன் பெற்று அந்தத் தேவைகளுக்கு அப்பணம் பயன்படுத்தப்பட்ட போதும் அதனால் போதிய வருமானம் கிடைக்காமையினால் கடன்களை மீளச்செலுத்த முடியாமலும் அவர்கள் காணப்படுகின்றனர்.
இவ்வாறான பல்வேறுபட்ட கடன் சுமைகளால் மீள்குடியேறிய குடும்பங்களிடையே குடும்பப்பிணக்குகள், குடும்ப வன்முறைகள், தற்கொலைகள் என்பன அதிகரித்து வருகின்றன.
யுத்தத்தின் பின்னரான காலப் பகுதியில் மீள்குடியேறிய மக்களின் தேவை கருதி நிதி நடவடிக்கைகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வேலைத் திட்டங்களில் பாதக, சாதக விளைவுகள் ஏற்பட்டுள்ளன என மத்திய வங்கியினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் தற்போது அரச, தனியார் வங்கிகளென 21 வரையான வங்கிக் கிளைகள் இயங்கி வருகின்றன. கடந்த 2009ம் ஆண்டுக்கு முன்னர் நான்கு வங்கிகள் மாத்திரமே இயங்கி வந்தன.
இதனை விட நிதி நிறுவனங்கள் குத்தகைக் கம்பனிகள் என அழைக்கப்படக் கூடிய லீசிங் கம்பனிகள் ஏராளம்.இதனை விட நுண்நிதிக் கம்பனிகள் எனப்படுகின்ற மைக்றோ பினான்ஸ் நிறுவனங்கள் இயங்குகின்றன.
அத்துடன் கிராமிய வங்கிகள், சமுர்த்தி வங்கிகள் என்பனவும் இயங்கி வருகின்றன. அத்துடன் வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள், அடகு பிடிப்பவர்கள் என பல தரப்பட்டவர்கள் நிதி நடவடிக்கைகளை கையாளுகின்றனர்.
இவற்றில் வங்கிகளில் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கு மிகவும் இலகுபடுத்தப்பட்ட வகையில் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் வங்கிகளுடாக வழங்கப்பட்ட கடன்களில் பத்து வீதமான கடன்கள் மீளச்செலுத்தப்படாமல் உள்ளன.
இவ்வாறு கடன்களை செலுத்த முடியாதவர்கள் அதிகமாக நுண்கடன் நிதி நிறுவனங்களை நாடி அதிகூடிய வட்டிக்கு கடன்களைப்பெற்று அதனை செலுத்த முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதாவது வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் கடன்களைப் பெற்றுக் கொண்டு உரிய காலத்தில் மீளச்செலுத்தப்படாமல் இருக்குமாயின் கடன் பெற்றவரின் பெயர், தே.அ.அட்டை எண் என்பன கொடுகடன் தகவல் பணியகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் பட்சத்தில் அவரது நிதி ஒழுக்கம் எவ்வாறுள்ளது என அவதானித்து எதிர்காலத்தில் கடன்களையோ அல்லது ஏனைய நிதி நடவடிக்கைகளையோ மேற்கொள்ள முடியும்.
இவ்வாறான நிலையில் மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட 46 நிதி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 26 இற்கும் மேற்பட்ட நிதிநிறுவனங்கள் தற்போது வடக்கில் இயங்கி வருகின்றன.
இவை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களாகும். இதனை விட மத்திய வங்கியின் ஆளுகைக்குட்படாத நுண்பாக நிதி நிறுவனங்களும் இயங்குகின்றன.
இவ்வாறான நிதி நிறுவனங்கள் கொடுகடன் தகவல் பணியகத்தின் தகவல்களில் பெயர் விபரங்கள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன பின்தங்கிய கிராமங்களில் உள்ள மக்களின் வீடுகளுக்குச் சென்று மிகவும் இலகுவான வகையில் அதிகூடிய வட்டி வீதத்தில் கடன்களை வழங்கி வருகின்றன. அத்துடன் குறித்த நிதி நிறுவனங்களில் சேமிப்புக்களுக்கான வட்டி வீதங்களும் அதிகமாகவே உள்ளன.
இவ்வாறான நிதி நிறுவனங்களில் கடன்களைப் பெற்றுக் கொள்பவர்கள் அதனை மீளச்செலுத்த முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அத்துடன் கடன்களால் குடும்பப் பிணக்குகள், குடும்பங்களின் பிரிவுகள், தற்கொலைகள் என்பன இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான நுண்கடன் திட்டங்கள் தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டிய தேவையும், அதனை தெளிவுபடுத்த வேண்டிய தேவையும் மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ளது.
இவ்வாறான கடன்களைப் பெற்றுக் கொண்டவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகும் நிலையினை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அவதானிக்க முடிந்துள்ளது.
அதாவது கடந்த வாரம் கிளிநொச்சி பொன்னகர் 72 வீட்டுத் திட்டத்தில் இவ்வாறு நுண்கடன் திட்டத்தின் மூலம் கடன்களைப் பெற்றுக் கொண்ட ஏழு வரையான பயனாளிகள் இலங்கை சட்டஉதவி ஆணைக்குழுவினது கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் தமது முறைப்பாடுகளை முன்வைத்ததுடன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகளையும் பதிவு செய்துள்ளனர்.
அதாவது வீட்டுக்கே வந்து கடன்களை வழங்கும் தனியார் நிதி நிறுவனங்களில் இருந்து கடன்களை தாங்கள் பெற்றுக் கொண்டதாகவும், அவற்றைச் செலுத்தி வரும் நிலையில் தற்போது தொழில் வாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி, வருமானமின்மை காரணமாக கடனை உரிய காலத்திற்குள் செலுத்த முடியாதுள்ளது. இதற்காக அவர்களிடம் நாங்கள் தவணைகளைக் கேட்கின்றோம். அவர்கள் அதற்கு உடன்படுவதில்லை. இந்தக் கடன்களை செலுத்துமாறு வற்புறுத்தி தினமும் இரவு 10.00 மணி வரையும் அதற்குப் பின்னரும் வீடுகளிலேயே நிற்கின்றனர். வயது வந்த பிள்ளைகளை வைத்திருக்கின்றோம். குடும்பத்திலும் சமூகத்திலும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் தமது முறைப்பாடுகளில் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கிராமத்திற்குச் சென்று இவ்விடயம் தொடர்பாக பலரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, வவுனியா நெடுங்கேணி மற்றும் முல்லைத்தீவு மல்லாவி , சாவகச்சேரிப் பகுதிகளில் இயங்கி வருகின்ற நிதி நிறுவனங்கள் அதி கூடிய வட்டிக்கு கடன்களை வழங்கியிருக்கின்றன.
இதில் 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களே இவ்வாறான கடன்களைப் பெற்றுள்ளன. கிளிநொச்சியில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் மக்களுக்கு அதிகூடிய வட்டி வீதங்களில் கடன்களை வழங்கி விட்டு அவற்றை அறவிட்டு வருவதுடன், உரிய காலத்தில் கடன்களை செலுத்தத் தவறின் பயனாளிகளிடம் அதற்குப் பதிலாக மிகவும் பெறுமதி வாய்ந்த வீட்டுப்பாவனைப் பொருட்களை பறித்துச் சென்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது,
அதாவது கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இரண்டு அங்கத்தவர்களைக் கொண்ட பெண்தலைமைத்துவக் குடும்பத்தில் உள்ள ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அந்த குடும்பத்திற்கான மாத வருமானம் 18000 ரூபாவிற்கும் குறைவான தொகையாக உள்ள நிலையில் குறித்த குடும்பம் இவ்வாறான நிதி நிறுவனங்களிடமிருந்து நான்குக்கும் மேற்பட்ட கடன்களைப் பெற்று மாதம் ஒன்றுக்கு சுமார் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொகையை வட்டியும்முதலுமாக செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.54000 ரூபாவிற்கு வாங்கிய தொலைக்காட்சிப் பெட்டியை குறித்த நிறுவனங்களில் ஒன்றுக்கு 20000 ரூபாவிற்கு கட்டாயத்தின் பேரில் அவர் கொடுத்துள்ளார்.
மற்றைய கடனைச் செலத்த முடியாமல் உள்ள நிலையில் குளிர்சாதனப்பெட்டியைத் தருமாறு நிதி நிறுவனத்தினர் வற்புறுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
"கடன் அறிவிடுபவர்கள் கடனைக் கட்டுமாறு வீட்டில் வந்து நிற்பார்கள். இரவு 10.00 மணி என்றாலும் அவர்கள் போக மாட்டார்கள். அதனால் மேற்படி தொலைக்காட்சிப் பெட்டியைக் கொடுத்தேன். இவர்கள் இரவு வேளைகளில் வீடுகளில் இருப்பதனால் நாங்கள் இருவரும் பெண்கள் என்பதால் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றோம். இனி தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும்" எனவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று நுண்கடன் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்ற இளம் குடும்பப் பெண்ணொருவர் அதனை செலுத்தத் தவறிய நிலையில், "கடன் அறிவிடுபவர்கள் தினமும் வருவதனாலும் இரவு வேளைகளிலும் பகல் வேளைகளிலும் காலநேரமின்றி இவர்கள் வருவதனாலும் எங்களது குடும்பத்தில் ஓரே பிரச்சினை. அத்துடன் எனது கணவனின் உறவினர்கள் மத்தியில் நான் தவறாகப் பார்க்கப்படும் நிலை கூட காணப்படுகின்றது" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இது போன்ற சம்பவங்கள் அதிகளவிலே இடம்பெற்று வருகின்றன.
அண்மையில் மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் கடன் பெற்ற பயனாளி ஒருவரின் வீட்டிற்கு இரவில் சென்று கடன் செலுத்துமாறு வற்புறுத்திய நிலையில் இவ்விடயம் பிரதேச செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இரவு வேளை குறித்த இடத்திற்குச் சென்ற பிரதேச செயலாளரால் நிதி நிறுவனப் பணியாளர் எச்சரிக்கை செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நிதி நிறுவனங்கள் கடன்களை அறவிடுவதாயின் பிற்பகல் 5.00 மணிக்குப் பின்னர் பயனாளிகளின் வீடுகளுக்குச் செல்லக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ள போதும் பின்தங்கிய பகுதிகளில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை கடன்களைப் பெறும் பயனாளிகள் அதனை செலுத்தத் தவறிய நிலையில் பகல் வேளைகளில் வீடுகளைப் பூட்டி விட்டு வேறு இடங்களுக்குச் சென்று விட்டு இரவு வேளைகளில் வருவதும் இடம்பெறுகிறது.
இவ்வாறான கடன்அறவீடுகள் தொடர்பாகவும் இதனால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கிளிநொச்சி மாவட்டத்தில் செயற்படும் பெண்கள் அமைப்புகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் மாவட்ட அரச அதிபர் மற்றும் மேலதிக அரச அதிபர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட நிலையில்,அண்மையில் நடைபெற்ற பால் நிலை மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தொடர்பாக மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பிற்பகல் 5.00 மணிக்குப் பின்னர் எவரும் பயனாளிகளின் வீடுகளுக்கு செல்லக் கூடாது என்றும் இவ்வாறு செல்வதனால் மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும் அவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட அரச அதிபரால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நுண்கடன் நிதி நிறுவனங்கள் மற்றும் அதிகூடிய வட்டி வீதங்களைக் கொண்டவர்களிடமிருந்து மக்கள் பல்வேறு தேவைகளுக்காக கடன்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.
குறிப்பாக வீட்டுத் திட்டங்களை நிறைவு செய்தல் மற்றும் வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்தல் போன்ற பல்வேறுபட்ட தேவைகளுக்காக இவ்வாறு முறைகளற்ற விதத்தில் அதிகூடிய வட்டிக்கு கடன்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.
சு. பாஸ்கரன் பரந்தன் குறூப் நிருபர்