
Aug 14, 2016யுத்தம் நடைபெற்ற காலத்தில் இலங்கை விமானப் படையினர் மேற்கொண்ட ஈவிரக்கமற்ற தாக்குதல்களுள் அனைவரது மனதையும் ஒருகணம் உலுக்கிய கோர சம்பவம் செஞ்சோலை படுகொலை. அதன் 10ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், கொடிய யுத்தத்திற்கு தமது உறவுகளை பறிகொடுத்த அப்பாவி சிறுமிகள் 61 பேர் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர். குறித்த தாக்குதலில் பலர் தமது அவயவங்களை இழந்து வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
மாணவிகளான குறித்த சிறுமிகள் மீது மனிதாபிமானமற்ற வகையில் இலங்கை படையினர் நடத்திய தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அப்போதைய ராஜபக்ஷ அரசாங்கம் இதனை வேறு விதமாக குறிப்பிட்டிருந்தது.
அதாவது, செஞ்சோலை சிறுவர் இல்லம் எனும் பெயரில் புலிகளின் பயிற்சி முகாமே இயங்கி வந்ததாகவும் அங்கிருந்தவர்கள் சிறுவர் போராளிகள் என்றும் குறிப்பிட்டு வந்தது. பொதுமக்கள் மீதான ஒவ்வொரு தாக்குதலின் பின்னரும் ஒவ்வொரு கதையை புனைந்துவந்த மஹிந்த அரசாங்கத்தின் கபட நாடகமே இந்த கட்டுக்கதையென புரிந்துகொள்வதற்கு நீண்டநாட்கள் செல்லவில்லை.
பாடசாலைகள் மற்றும் சிறுவர் இல்லங்கள் மீது நடத்தப்பட்ட இவ்வாறான கோர தாக்குதல்களை தடுப்பதற்கு, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டதென பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
அன்றைய தினம் துடிதுடித்து இறந்த சிறுமிகளின் ஆத்ம சாந்தி வேண்டியும் நீதி கிடைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி, இன்றைய தினம் தமிழர் விரவி வாழும் வடக்கு கிழக்கின் பெரும்பாலான இடங்களில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக இன்று பிற்பகல் 3.30 மணிக்கு யாழ்.முனியப்பர் கோவிலடியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் விசேட பிரார்த்தனை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது