Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Tuesday, January 13, 2015

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க விசேட குழு அமைக்கப்படும்:பிரதமர் ரணில் விக்னேஸ்வரனுக்கு உறுதி

SRI LANKA-TAMIL-VOTE JAN 13, 2015 
Athavan Newsவடக்கு மாகாணத்தில் இராணுவம் சுவீகரித்த காணிகளை மக்களிடம் வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றை அமைக்க விரைவான நடவடிக்கைளை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வட மாகாண முதலமைச்சருக்கு விக்னேஸ்வரனுக்கு உறுதியளித்துள்ளார்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அவரது அலுவலகத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துப் கலந்துரையாடிய நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சந்திப்புத் தொடர்பில் விக்னேஸ்வரன் தெரிவிக்கையில் வடக்கு மாகாணத்தில் இராணுவத் தேவைகளுக்காக மக்களின் பெருமளவிலான காணிகள் சுவீகரிக்கப்பட்டன. இவற்றை விடுவிக்குமாறு நான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் கேட்டிருந்தேன்.ஆனால் காணிகளை விடுவித்தால் எதிர்க்கட்சிகள் இன ரீதியான போலிப் பிரசாரங்களை மேற்கொள்ளும் என பிரதமர் அஞ்சுகிறார்.எனினும் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய விசேட குழு ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார்.
இந்தக் குழுவில் காணிகளை இழந்த மக்களின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், வடக்கு மாகாண இராணுவத் தளபதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பல தரப்பினரும் இடம்பெறுவார்கள்.இதேபோன்று அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் பிரதமருடன் பேசினேன் இதற்கு அவர் உடனடியாக அனைத்துக் கைதிகளையும் விடுவிக்க முடியாது இருக்கும் என்றும், 2002ம் ஆண்டு சமாதான ஒப்பந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் அமுல்படுத்தத் தேவையானவற்றை செய்வேன் எனக் கூறினார்.
இது தவிர வடக்கு மாகாண சபைக்கு இப்போதும் தொடரும் நெருக்கடிகள், இடையூறுகளையும் தவிர்க்கத் தாம் உதவுவார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.மேலும் வடக்கின் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் முகமாக ஒட்டுசுட்டான், பரந்தன், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைத்துத் தருவதாகவும் பிரதமர் தெரிவித்திருந்ததாக முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.