மைத்திரிக்கு 59% மஹிந்தவுக்கு 41%: பத்திரிகையின் ஆசிரியர் புலனாய்வு பிரிவினரால் விசாரணை
குறித்த பத்திரிகையில் வெளியான செய்தியொன்று தொடர்பிலேயே அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டதாகவும் அவரிடம் நீண்ட வாக்கு மூலம் ஒன்று புலனாய்வுப் பிரிவினரால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கேசரியிடம் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள புலனாய்வுப் பிரிவினரின் தலைமையகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ள ராவய பத்திரிகையின் ஆசிரியர் அங்கு சுமார் இரு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன் போது அந்த பத்திரிகையில் வெளியான மைத்திரிக்கு 59% மஹிந்தவுக்கு 41% என்ற தலைப்பில் வெளியான செய்தி குறித்தே குறித்த இரு மணி நேரமும் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வெளியான குறித்த பத்திரிகையில் புலனாய்வுப் பிரிவின் பிரதான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்திர வாகிஷ்ட ஜனாதிபதி தேர்தல் குறித்து புலன் ஆய்வு அறிக்கை ஒன்றினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் கையளித்ததாகவும் அதில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிக்கு 59 வீதமான வாக்குகளும் மஹிந்தவுக்கு 41 வீதமான வாக்குகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் முன்பக்க செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் அந்த அறிக்கையை பார்த்த ஜனாதிபதி மஹிந்த கோபத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாகிஷ்டவை புலனாய்வுப் பிரதானி பதவியிலிருந்து நீக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே ராவய பத்திரிகை ஆசிரியர் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தமது செய்தி சரியானதே என்ற நிலைப்பாட்டில் குறித்த பத்திரிகையின் ஆசிரியர் உள்ளார். அப்பத்திரிகையின் ஆசிரியர் ஜனரஞ்சன பீ.பீ.சி. சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள தகவலில் தமக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம் குறித்த அறிக்கையின் உண்மை தன்மையில் எந்தவொரு சவாலும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.