Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Saturday, November 29, 2014

 
2014-11-29 16:39:00 | Leftinraj
இந்நாடு இன்று ஒரு ஜனாதிபதி தேர்தலை சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உடன்பிறப்புகளும் அவர்களது அமைப்புகளும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும். அவர்கள் மட்டுமல்ல உள்நாட்டிலே செயற்படும் தமிழ்த் தேசிய  சிந்தனையாளர்களும் மிகவும்  சாணக்கியத்துடன் பணியாற்றிட வேண்டுமென முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற “இன்றைய அரசியல் நிலைமைகள்’ தொடர்பான ஜனநாயக இளைஞர் இணைய வாராந்த கலந்துரையாடலின் போது  ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இங்கு மனோ கணேசன் தொடர்ந்து கூறியதாவது;

இன்று நாங்கள் கத்தியின் மீது நடக்கின்றோம். நடக்கவும் வேண்டும். கால், கைகளை வெட்டிக்கொள்ளவும் கூடாது. இது கஷ்டமான காரியம்தான். இதிலுள்ள கஷ்டம் இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு தான் தெரியும். ஆனாலும் முன்னெடுத்த காலை பின் வைக்கும் பழக்கம் எனக்கு கிடையாது. இன்று நான் கஷ்டப்பட்டு உருவாக்கும் இந்த மேடையில் இந்த கஷ்டங்களில் பங்குபெறாதவர்கள் வந்து நாற்காலி போட்டு நாளை உட்காரலாம். அதுபற்றி காலம்தான் முடிவு செய்யும். ஆனால் நான் என்ன செய்கிறேன். அவர் என்ன செய்கிறார். இவர் என்ன  செய்கிறார் என மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனினும் இன்று நாங்கள் செய்துவரும் காரியங்களை அழித்து விடாதீர்கள் என உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழும் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழ், முஸ்லிம் மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக ஜனநாயக போராட்டங்களை நாங்கள் இன்று முன்னெடுக்கின்றோம். அதேவேளை தங்கள் பிரச்சினைகளை முன்வைத்து பெரும்பான்மை இனமும் ஒருபுறம் கணிசமாக ஒன்றுசேரத் தொடங்கி விட்டது. அவர்கள் எங்கள் பிரச்சினை பற்றி அக்கறை கொண்டுள்ளார்கள் என்று நான் ஒருபோதும் உண்மைக்கு புறம்பாக சொல்ல வில்லையே. ஏனென்றால் எனக்கு உண்மையை மூடி மறைத்து பேசத் தெரியாது.

ஆனால் எனக்கும் எங்களுடன் கரங்கோர்த்துள்ள அணியினருக்கும் சாணக்கியம் தெரியும்.  எந்த பிரச்சினைக்கு எப்போது முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனத் தெரியும். எனவே ஒன்றுபட்ட இலங்கை நாட்டிலே வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும், ஏனைய மத சிறுபான்மையினருக்கும் இன்றைய தினத்தைவிட நல்ல ஒரு நாளைய தினத்தை உருவாக்க விளையும் எங்கள் வேலைத்திட்டத்தை சிதைத்து  விடாதீர்கள் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் பிரசாரம் அதிகாரபூர்வமாக ஆரம்பித்த பிறகு நாடு முழுக்க வந்து நான் நமது மக்களை சந்தித்து மேலதிக விளக்கங்களை தருவேன்.