Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Wednesday, September 10, 2014

நியாயமான தீர்வொன்றினை எட்டக் கூடிய சர்வதேச விசாரணையொன்றினை மேற்கொள்ள அரசாங்கம் இடமளிக்க வேண்டும்

Home
Wed, 09/10/2014
ஐ.நா. வின் புதிய ஆணையாளரை தனிப்பட்ட முறையில் சந்திப்பதனால் இலங்கை விடயத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. எனவே, நியாயமான தீர்வொன்றினை எட்டக் கூடிய சர்வதேச விசாரணையொன்றினை மேற்கொள்ள இலங்கை
அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.
 
நவநீதம் பிள்ளையின் கோட்பாட்டை பின்பற்றி இலங்கை விடயத்தினை கையாள்வதாக ஐ.நா.வின் புதிய ஆணையாளர் தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும். எனவே, தமிழ் மக்கள் மீதான உரிமை மிறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை சரியான எல்லையினை அடையும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேம சந்திரன் தெரிவித்தார்.
 
ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 27 ஆவது கூட்டத்தின் போது முன்னாள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் செயற்பாடுகளை பின்பற்றி இலங்கை விடயங்களை கையாள்வதாக ஐ.நா.வின் புதிய ஆணையாளர் செய்யித் அல் - ஹூஸைன் தெரிவித்திருந்த நிலையில் இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தினை வினவிய போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் குறிப்பிடுகையில்;
 
இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பேரவை கவனத்திற்குக் கொண்டு வந்தமையும் மனித உரிமைகள் பேரவைகள் முன்னாள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் செயற்பாடுகள் தான்தோன்றித் தனமாக நடைபெறவில்லை. அதேபோல் பக்கசார்பான எவ்வித நடவடிக்கைகளையும் நவநீதம் பிள்ளை கையாளவுமில்லை.
 
அவர் தனது கடமையினை சர்வதேச சட்டத்திட்டங்களுக்கு அமைய செய்துள்ளார். இப்போது புதிய ஆணையாளர் செய்யத் அல் - ஹுசைன் தனது செயற்பாடுகளை நவநீதம்பிள்ளையின் பாதையினை பின்பற்றி செல்வதாக தெரிவித்துள்ளமையானது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் விதிமுறைகளுக்கு உட்பட்டதும் அதன் மரபு வழியாக இருப்பதோடு இலங்கை விடயத்தில் அதே அக்கறையினை எடுக்க முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றச்சாட்டுக்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச தரப்பில் பேசுப்பட்ட போதும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இலங்கை அரசாங்கத்திடம் அதன் உள்ளக செயற்பாடுகள் பற்றி வலியுறுத்தப்பட்டதுடன் உள்ளக விசாரணைக்கான வேண்டுகோளும் பல தடவைகள் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் எவ்வித அக்கறையும் செலுத்தாது தான்தோன்றித்தனமாக செயற்பட்டதன் பின்னரே சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டுமென தீர்மானம் எடுக்கப்பட்டது.
 
இவ்விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்க தரப்பு ஆரம்பத்தில் இருந்தே தமது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். எனினும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளரை தனிப்பட்ட முறையில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளனர். ஆணையாளரை தனிப்பட்ட முறையில் சந்திப்பதனால் இலங்கை விடயத்தில் சர்வதேசம் கொண்டுள்ள நிலைப்பாட்டினை மாற்றிவிட முடியுமா என அரசாங்கம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இலங்கையில் சுயாதீனமான விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத நிலையில் நியாயமான தீர்வினை சர்வதேச விசாரணையொன்று இலங்கையில் இடம் பெறுவதை இலங்கை அரசாங்கம் இடமளிக்க வேண்டும். இலங்கையிலும் தீர்வொன்றினை நோக்கிய செயற்பாடுகளுக்கு இடமளிக்காது சர்வதேசத்தின் விசாரணையையும் தடுக்கும் இலங்கையின் நடவடிக்கைகள் கண்டிக்கத் தக்க விடயமாகும்.
 
மேலும், தற்போது புதிய ஆணையாளரின் செயற்பாடுகளும் சர்வதேசத்தின் வழிமுறைகளும் இலங்கையில் இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை சரியான எல்லையினை அடையும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.