Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Tuesday, September 9, 2014

ஓய்வு பெற்ற தொழிலாளர் குடும்பங்கள் தோட்டத்திலிருந்து வெளியேற்றம் - டீன்ஸ் லேன்ட் தோட்டத்தில் சம்பவம்

HomeSubmitted by MD.Lucias on Tue, 09/09/2014
பெருந்தோட்டத்தில் தொழில் செய்யவில்லையென்ற காரணத்தை முன்னிலைப்படுத்தி, ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் குடும்பங்களை தோட்டத்தை விட்டு வெளியேற்றிய சம்பவமொன்று   டீன்ஸ் லேன்ட் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
 
மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த இராமசாமி  மாணிக்கம் உள்ளிட்ட இரு தொழிலாளர் குடும்பங்களே  இவ்வாறு தோட்டத்தைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளன.
 
மூன்று தலைமுறைகளாக தோட்ட லயக்குடியிருப்புக்களில் வாழ்ந்து வரும் இத் தொழிலாளர்கள் ஏதோ வகையில் கடன் பெற்றும் தமது ஓய்வூதிய பணத்திலிருந்தும் தாம் இருக்கும் லயக் குடியிருப்புக்களை சீரமைத்து வாழ்ந்து வருகின்றனர். இச்சீரமைப்பிற்கு இலட்சக்கணக்கான ரூபா பணமும் செலவு செய்யப்பட்டுள்ளது. அப்படியிருந்தும்  தோட்டத்தில் எவரும் வேலை செய்யவில்லையென்ற காரணம் காட்டப்பட்டு அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
1997 ன் இல. 7 ஆவது காணி சுவீகரிப்பு சட்ட  சரத்திற்கமைய குடியிருப்பு மற்றும் காணி சுவீகரிக்கப்பட்டு தொழிலாளர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
 
இதேவேளை, அண்மையில் ஓய்வு பெற்ற தொழிலாளியொருவர் மரணமாகிய பின் அவரது சடலத்தையும் தோட்ட மயானத்தில் புதைக்கவும், நுவரெலியா பகுதி தோட்டமொன்றின் தோட்ட நிருவாகம் அனுமதி வழங்க மறுத்து விட்டது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் தோட்ட முகாமைத்துவத்தின் இணக்கப்பாட்டின் பேரில் சடலம் தோட்ட மயானத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றது.
 
மேற்படி விடயங்கள் குறித்து விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆர். எம்.கிருஸ்ணசாமி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு அவசர கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.