அறிமுகம்
சங்க காலத்தை வீரயுகம் என்று குறிப்பிடுவார், பேரா. க. கைலாசபதி. இலக்கியம் அகம் புறம் என இருவகைப்படுத்தப்பட்டு, போரும் அதனோடு தொடர்புடைய அம்சங்களும் புறத்திணைக்குள் அடக்கப்பட்டன. குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் எனும் ஐவகை நிலத்துக்கும் வெட்சி, வஞ்சி, உழிஞை, வாகை, தும்பை எனும் ஐவகைப் போர் ஒழுக்கங்கள் வழக்கில் இருந்தன.
சங்கத்துச் சான்றோர், போர் என்பதை இயல்பான ஒரு விடயமாகக் கருதினர். இதனையே, 'ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவது அன்று இவ் உலகத்து இயற்கை' (புறநானூறு: 70) என, 'ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிடம் ஒருவன் தோற்பதும் புதியது அன்று, அது இவ்வுலகத்து இயற்கை' எனப் புறநானூற்றுப் புலவர் இடைக் குன்றூர்க் கிழார் குறிப்பிடுகின்றார்.
எனவே, போரில் எதிரியை வெற்றிகொண்டு, எதிரி நாட்டை எரியூட்டி, அவர்தம் விளைநிலங்களை யானைப் படையைக் கொண்டு துவம்சம் செய்து வெற்றி வாகைசூடும் வீரச் செயல் குறித்து அரசருக்குப் புகழாரம் சூட்டும் சங்கப் பாடல்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, பாண்டரங் கண்ணனார் எனும் புலவர், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாடிய ஒரு பாடல் இப்படி அமைகிறது:
'வினைமாட்சிய விரைபுரவியொடு
மழையுருவின தோல்பரப்பி
முனைமுருங்கத் தலைச்சென்றவர்
விளைவயல் கவர்புஊட்டி
மனைமரம் விறகுஆகக்
கடிதுறைநீர்க் களிறுபடீஇ
எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்
புலம்கெட இறுக்கும் வரம்பில் தானைத்
துணைவேண்டாச் செருவென்றிப்
புலவுவாள் புலர்சாந்தின்
முருகன் சீற்றத்து உருகெழு குருசில்!
மயங்குவள்ளை மலர்ஆம்பல்,
பனிப்பகன்றைக் கனிப்பாகல்
கரும்புஅல்லது காடுஅறியாப்
பெருந்தண்பணை பாழ்ஆக
ஏமநன் னாடு ஒள்எரி ஊட்டினை;
நாம நல்லமர் செய்ய