2014-09-26 11:50:19 | Leftinraj
கொழும்பில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது பலம் எமது மக்கள். எமது உரிமைப் போராட்டம் ஆரம்பித்த காலம் தொடக்கம் எமது மக்கள் தமது உறுதியான நிலைப்பாட்டை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபித்திருக்கிறார்கள். எமது மக்கள் பலவிதமான துன்ப, துயரங்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஆனால், எமது மக்கள் அடிபணியவில்லை. காரணம் என்னவென்றால், அவர்கள் ஒரு தனித்துவமான மக்கள், பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட மக்கள்,
தங்களுடைய சொந்த மொழியைக் கொண்ட மக்கள், சொந்த கலாசாரத்தைக் கொண்ட மக்கள், இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் நாட்டின் வடகிழக்கில் சரித்திரபூர்வமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் ஒரு தனித்துவமான மக்கள், அந்தத் தனித்துவத்தினுடைய பெறுமதியையும் பெருமையையும் அந்த மக்கள் உணருகிறார்கள்.
இந்த நாட்டில் வாழுகின்ற பெரும்பான்மையின மக்கள் எவ்விதமாக ஒரு தனித்துவமான மக்களாக இருக்கிறார்களோ, தங்களுடைய தனி மொழியுடன், தனிக்கலாசாரத்துடன், தனிப் பாரம்பரியத்துடன் வாழ்கிறார்களோ அவ்விதமாக தமிழ் மக்களும் இந்த நாட்டில் வாழ வேண்டும்.
அரசியல் ரீதியான போராட்டம், சாத்வீக ரீதியான போராட்டம், ஆயுதப் போராட்டம் என நீடித்த எமது போராட்டம், ஆயுதப் போராட்டம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், பகிர்ந்தளிக்கப்படுகின்ற இறைமையின் அடிப்படையில், போதியளவிலான அதிகாரப்பகிர்வுடன் எமது அரசியல் ரீதியிலான, பொருளாதார ரீதியிலான கலாசார – சமூக ரீதியிலான அபிலாஷைகளை, தேவைகளை நாங்களே முடிவெடுத்து நாங்கள் நிறைவேற்றக்கூடிய ஒரு அரசியல் தீர்வு வேண்டுமென்றே நாம் தற்போது கேட்கின்றோம். இது நியாயமான கோரிக்கை.
ஜனாதிபதி கூறுகிறார் எமக்கு பொலிஸ் அதிகாரம் தரமுடியாது என்று. எமக்கு பொலிஸ் அதிகாரம் தரப்பட்டால் அதனை நாம் பக்குவமாகப் பயன்படுத்துவோம். அரசாங்கத்தைப் பார்க்க நாம் திறமையாக வழிநடத்துவோம்.
தொடர்ந்து அநீதிகள் ஒரு மக்களுக்கு இழைக்கப்பட முடியாது. தொடர்ந்து ஒரு மக்கள் விரட்டியடிக்கப்பட முடியாது. தொடர்ந்து ஒரு மக்கள் இரண்டாம் பிரஜைகளாக வாழ முடியாது, மக்கள் சமத்துவமாக சமமாக வாழ வேண்டும். கௌரவமாக வாழ வேண்டும். பாதுகாப்பாக வாழ வேண்டும். சுயமரியாதையுடன் வாழ வேண்டும். அவற்றை அடையக்கூடிய விதத்தில் அவர்களுக:;கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதனைச் செய்ய வேண்டும் என சர்வதேச சமூகம் வலியுறுத்துகின்றது.
ஒரு மக்களுடைய மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள், சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டிருந்தால் அவை சம்பந்தமாக பக்கச்சார்பற்ற சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும். உள்நாட்டு விசாரணை நடைபெறாத நிமித்தம் ஏறத்தாழ நான்கு வருடங்களுக்குப் பின்னர் ஒரு சர்வதேச விசாரணை நடைபெறுகின்றது. இந்த நிலைமையில்தான் நாம் தற்போது இருக்கின்றோம்.
எமது மக்களுடைய உறுதித்தன்மை, எமது மக்கள் தங்களுடைய நிலைப்பாட்டில் திடமாக இருந்தமை அவர்களுக்கு பலத்தைத் தரக்கூடிய ஒரு சூழலை இன்று ஏற்படுத்தியிருக்கிறது. நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இந்தக் கருமங்களை ஆற்ற வேண்டும். நாம் நிதானமாகச் செயல்பட வேண்டும்.
ஒரு சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட நாம் முடிவெடுத்தால் நாம் மிகவும் பக்குவமாக – நிதானமாக எவ்விதமான வன்முறையும் இல்லாமல் அதனை நாம் முன்னெடுக்க வேண்டும். அவ்விதமாக நாம் முன்னெடுப்போமாக இருந்தால் சர்வதேச சமூகம் நூற்றுக்கு நூறு வீதம் எம் பின்னால் நிற்கும். இதனை நான் ஏன் கூறுகின்றேன் என்றால், பிரதமர் மோடியைச் சந்தித்த பின் நான்விடைபெற்ற பொழுது அவர் எங்களுக்குக் கூறிய கருத்து, நாங்கள் உங்களுடன் நூற்றுக்கு நூறு வீதம் நிற்கின்றோம் என்று கூறினார்.
இதை எமது மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஏனைய மக்களையும் நாம் எங்களுடன் சேர்க்க வேண்டும். சிங்கள மக்கள் மத்தியில் உள்ள முற்போக்குச் சக்திகளை நாங்கள் எம்முடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு எங்களுடைய கருமங்களை விளக்க வேண்டும். அவர்களுடைய ஆதரவை நாங்கள் பெற வேண்டும்.
ஆகவே, உண்மையை நாங்கள் பெரும்பான்மை முற்போக்குச் சக்திகளுக்கு விளக்க வேண்டும். அவர்களுடைய ஆதரவையும் பெற வேண்டும். இஸ்லாமிய சகோதரர்களின் ஆதரவையும் நாம் பெற வேண்டும். அவர்களும் நாங்களும் வடகிழக்கில் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்திருக்கிறோம். நூங்கள் தொடர்ந்து கௌரவமாக பாதுகாப்பாக வாழ வேண்டும். எங்கள் மத்தியில் ஒற்றுமை இருக்க வேண்டியது அத்தியாவசியம்.
சர்வதேச சமூகத்தினுடைய ஆதரவை நாங்கள் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதை நாங்கள் ஒருபோதும் இழக்க முடியாது. இந்தப்பிரச்சினை தொடர முடியாது. இன்று அரசாங்கம் நினைக்கின்றது வடகிழக்கினுடைய இன விகிதாசாரத்தினை மேலும் மாற்றியமைத்து அங்கே உள்ள மொழி ரீதியான கலாசார ரீதியான அடையாளங்களை அகற்றி இல்லாமல் செய்து மாற்றியமைத்தால் ஒரு பத்து வருடங்களுக்குப் பின்பு இனப்பிரச்சினை இல்லை என்று தாம் கூறலாம் என்று நினைக்கிறார்கள்.
ஆதலால், இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான முடிவை நாங்கள் விரைவில் ஏற்படுத்த வேண்டும். தம்பி மாவை சேனாதிராஜா அவர்கள் தமிழரசுக் கட்சியினுடைய தலைவராக இருக்கின்ற பொழுது இயன்றளவுக்கு வருகின்ற வருடத்துக்குள் இந்தப் பிரச்சினைக்கு நாங்கள் ஒரு முடிவைக் காண்பதற்கு நாங்கள் முயற்சிக்க வேண்டும். நாங்கள் ஒருமித்து ஒன்றாகச் செயல்பட வேண்டும்.