Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Wednesday, July 9, 2014

பேச்சுக்களுக்கு முன்னோடியாக இராணுவ ஆக்கிரமிப்பு நீக்கப்பட வேண்டும் - தென்னாபிரிக்க குழுவிடம் TNA

பேச்சுக்களுக்கு முன்னோடியாக இராணுவ ஆக்கிரமிப்பு நீக்கப்பட வேண்டும் - தென்னாபிரிக்க குழுவிடம் TNA
08 ஜூலை 2014
பேச்சுவார்த்தை ஒன்று ஆரம்பமாவதற்கு முன்னர் வடக்கு, கிழக்கில் காணப்படும் இராணுவ ஆக்கிரமிப்பு தளர்த்தப்பட்டு, இடம்பெயர்ந்த மக்களுடைய மீள் குடியேற்றம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை தென்னாபிரிக்க தூதுக்குழுவிடம் வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இதனை தாம் ஒரு முன்நிபந்தனையாக முன்வைக்கவில்லை எனவும், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இதனை அரசாங்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றது.

கொழும்பு தாஜ் சமூத்திரா ஹொட்டலில் இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டழமைப்புக்கும் தென்னாபிரிக்காவின் பிரதி ஜனாதிபதி சிறில் ரமபோசவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. காலை 7.15 க்கு ஆரம்பமான இச்சந்திப்பு 8.45 வரையில் நீடித்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், மாவைசேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், தென்னாபிரிக்க பிரதி ஜனாதிபதி சிறில் ரமபோச தலைமையிலான குழுவில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம், ரோயல் கிளாக் உட்பட ஆறு பேர் இடம்பெற்றிருந்தனர்.


கூட்டமைப்பின் சார்பில் பேச்சுக்களுக்குத் தலைமை தாங்கிய சம்பந்தன், போருக்குப் பிந்திய நிலைமைகள் குறித்து விளக்கிக் கூறினார். 'வடக்கில் பாரியளவில் இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. பொதுமக்களுடைய காணிகளில் இராணுவம் ஆக்கிரமித்துள்ளதால் இடம்பெயர்ந்த மக்கள் பெருமளவுக்கு மீளக்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது.

அதனால், இராணுவப் பிரசன்னம் நீக்கப்பட்டு மக்கள் மீளக்குடியேறி வழமையான வாழ்க்கையைத் தொடர்வதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.  முன்னிரிமை அடிப்படையில் இதனைச் செய்ய வேண்டும். இதன் மூலமாக மட்டுமே மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்' என சம்பந்தன் தெரிவித்தார்.

சமாதானப் பேச்சுவார்த்தை முயற்சிகள் மற்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழு குறித்து தென்னாபிரிக்க குழுவினர் கேள்வி எழுப்பிய போது பதிலளித்த சம்பந்தன், அரசாங்கத்துடன் மூட்டமைப்பு முன்னர் நடத்திய பேச்சுக்கள் தொடர்பில் விளக்கினார். 'அரசாங்கத்துடன் ஒருவருடகாலமாக கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்திய போதும் அரசாங்கமே பேச்சுக்களை முறித்துக்கொண்டது' எனக் குறிப்பிட்ட சம்பந்தன், இலங்கை இந்திய உடன்படிக்கை உட்பட முன்னைய உடன்படிக்கைகளை முன்னைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தத்தவறிய வரலாற்றையும் விளக்கினார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் நம்பிக்கை வைக்க முடியாததத்கான காரணங்களையும் தெரிவித்த சம்பந்தன், அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் காணப்படக்கூடிய உடன்படிக்கையை பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்பாக கொண்டு செல்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்குமாயின் அது தொடர்பில் பரிசீலிக்கலாம் எனவும் தெரிவித்தார். 

இந்த நிலையில் கூட்டமைப்புடனான பேச்சுக்களைத் தொடர்ந்து தென்னாபிரிக்க குழு யாழ்ப்பாணம் புறப்பட்டுள்ளது.