இலங்கையிலுள்ள ஒரே பயங்கரவாத அமைப்பு பொதுபல சேனாவே: ரொஹான் குணரத்ன
இலங்கையிலுள்ள ஒரே பயங்கரவாத அமைப்பு பொதுபல சேனா மட்டும்தான் என்று சர்வதேச பயங்கரவாத தடுப்பு நிபுணர் ரொஹான் குணரத்ன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் இருப்பதாக அண்மைக்காலமாக திவயின மற்றும் லக்பிம செய்திப் பத்திரிகைகள் பெருமளவில் செய்திகளை வெளியிட்டு வந்தன.
இந்நிலையில் தனது கருத்துக்கு வலுச்சேர்க்கும் விதமாக லக்பிம பத்திரிகை செய்தியாளர் சர்வதேச பயங்கரவாத தடுப்பு நிபுணர் ரொஹான் குணரத்னவை அண்மையில் பேட்டி எடுத்திருந்தார். இதன்போது இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் இருப்பதாக லக்பிம செய்தியாளர் திரும்பத் திரும்ப வலியுறுத்தியும் அதனை ரொஹான் குணரத்ன திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இலங்கையில் தற்போதைக்கு தமிழ், முஸ்லிம்கள் யாரும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதில்லை என்றும், பொதுபல சேனாவுடன் இணைந்துள்ள ஒரு சிலரே அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான யுத்த காலங்களின்போது அரசாங்க இராணுவத்தில் இணைந்து செயற்பட்ட சில முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்ததை ரொஹான் குணரத்ன ஏற்றுக் கொண்டுள்ளார். எனினும் இறுதி யுத்த கொடுமைகள் கண்டு அந்த முஸ்லிம் இளைஞர்களும் தங்கள் ஆயுதங்களை மீளக் கையளித்து, இராணுவத்துக்கு உதவுவதை நிறுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் எந்தவொரு முஸ்லிம் இளைஞரிடமும் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதற்கு முகாந்திரம் கிடையாது என்று ரொஹான் குணரத்ன மறுத்துள்ளார்.
எனினும் பொது பல சேனாவின் செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில், அரசாங்கம் அந்த அமைப்புக்கு தொடர்ந்தும் உதவி செய்யும் பட்சத்தில் இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் எதிர்காலத்தில் உருவாக வழியேற்படும் என்பதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். அதனைத் தடுக்க பொதுபல சேனாவைத் தடை செய்து, அதன் முக்கியஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரொஹான் குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.